இலங்கையில் போர்க்கப்பல்களை அணிவகுக்க சீனா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள்- ராமதாஸ்

இலங்கையில் போர்க்கப்பல்களை அணிவகுக்க சீனா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா இதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலங்கையின் அம்பன்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பார்க்குமோ? என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இனிவரும் காலங்களில் தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து அம்பன்தோட்டை துறைமுகத்திற்கு அணிவகுக்கச் செய்ய சீனா தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை வருகை எதிர்பாராமல் நடந்த ஒன்று அல்ல. இந்தியாவை உளவு பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று தான்.

இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு இலங்கை தடை விதித்த நிலையில், அந்தக் கப்பல் அதன் பயணத்தை தொடர்ந்திருக்கலாம். சீனக் கப்பலுக்குத் தேவையான எரிபொருள், அதில் உள்ள பணியாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது இலங்கைக்கு வரத் தேவையில்லை. ஆனால், கடந்த 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடுக்கடலில் காத்திருந்து, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அம்பன்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருப்பதிலிருந்தே சீனாவின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.உலகிலேயே மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக பத்தாவது இடத்தில் தான் சீனா உள்ளது என்றாலும் கூட, உலகின் மிக வலிமையான கடற்படையை சீனா தான் வைத்திருக்கிறது. தனது எல்லையைக் கடந்து உலகம் முழுவதும் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கிறது.

அரபிக்கடலில் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டியில் தமது முதல் வெளிநாட்டு கடற்படை தளத்தை அமைத்துள்ள சீனா, பாகிஸ்தானின் கராச்சி, க்வாடார் துறைமுகங்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதி தான் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் சீனா, அதற்காக இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கடற்படை தளத்தை அமைப்பதற்கு விரும்புகிறது.

கம்போடியா, சீஷெல்ஸ், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் தளம் அமைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அம்பான்தோட்டை துறைமுகத்தை தனது அதிகாரப்பூர்வமற்ற கடற்படை தளமாக மாற்றிக் கொள்ள சீன அரசு விரும்புகிறது.

சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்காக அம்பான்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை கொடுத்துள்ளது. அம்பான்தோட்டை துறைமுகத்தை வணிக பயன்பாடுகளுக்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்; ராணுவ பயன்பாட்டுக்காக பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, அதிகாரப்பூர்வமற்ற வகையில் கடற்படை தளமாக பயன்படுத்துவதை இலங்கையால் தடுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

சீன கடற்படையிடம் 355 போர்க்கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இந்தக் கப்பல்களை இனி ஒவ்வொன்றாக அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சீனா நிறுத்தி வைக்கும். அதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதை இந்திய ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கவலையுடன் ஒப்புக் கொள்கின்றனர்.

இந்தியாவையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை சீனாவின் 53 உளவுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலம் வந்திருக்கின்றன. எந்த நேரத்திலும் குறைந்தது 3 முதல் 5 கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழகத்திலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு சீன போர்க்கப்பல்களும் வரத் தொடங்கினால் அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இதைக் கருத்தில் கொண்டு, தென்னிந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதால், அதை மனதில் வைத்து, இலங்கை குறித்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவு நிலைப்பாடுகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்