இலங்கை வழியாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற போலாந்து வாசி கைது

இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து, தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம், ஜாக்கெட், சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், 18கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள், மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டு, கடலோர பாதுகாப்பு பிரிவினர், க்யூ பிரிவினர் என பல்வேறு பட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவி, ட்ரான் கமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

அதன் போது, வேதாரண்யம் பகுதிக்கு அருகில் உள்ள ஆறுகாட்டு பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் போலாந்து நாட்டை சேந்தவர் என தெரியவந்ததை அடுத்து இலங்கையில் இருந்து கடவுசீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்தினுள் ஊடுருவினார் என குற்றம் சுமத்தி மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்