இலங்கையில் இடம்பெற்ற பாரியமனித உரிமை மீறல்களிற்கு நீதிவழங்குவதாக உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ள ரிஷி சுனாக்

இலங்கையில் இடம்பெற்ற பாரியமனித உரிமை மீறல்களிற்கு நீதிவழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரிட்டனின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுபவர்களில் ஒருவரான  ரிசி சுனாக் பிரிட்டிஸ் தமிழ் கென்சவேர்டிவ்களுடனான சந்திப்பின்போது இலங்கை அதிகாரிகளிற்கு  எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்துள்ளார்.

ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிரான பிரிட்டனின் தடைகள் போன்ற தடைகள் குறித்து அவர் ஆராய்ந்துள்ளார்.

பிரிட்டனின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைத்துவ தேர்தலிற்கு முன்னதாக ரிசி சுனாக் தமிழ் கென்சவேர்ட்வ்களை சந்தித்துள்ளதுடன் பிரிட்டனின் சமூகத்திற்கான அவர்களது பங்களிப்பினை பாராட்டியுள்ளதுடன் இலங்கை தொடர்பான கரிசனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உரையின் ஆரம்பத்தில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி மிகவும் உயர்வான பணவீக்கம் அத்தியாவசியப்பொருட்களிற்கான தட்டுப்பாடுகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் அனைவருக்காகவும் இலங்கைக்காகவும் எனது இதயம் இயங்குகின்றது என தெரிவித்துள்ள ரிசி சுனாக்  ஊழல் அற்ற ஜனநாயக இராணுவத்தின் பொருத்தமற்ற செல்லாக்கு இல்லாத இலங்கை குறித்த தனது நோக்கினை முன்வைத்துள்ளார்.

இதனை சாதிப்பதற்கும் மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கும் நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணயநிதியத்தின் உதவியின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட வலிகள் வேதனைகளை தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஆயுதமோதலின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்களிற்கு தனது  பச்சாதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆதரவளிப்பேன் என ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.

நான் பிரிட்டனின் பங்களிப்பு குறித்து பெருமிதம் அடைகின்றேன் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் பிரிட்டன் தொடர்ந்தும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த ஐநா தீர்மானத்திற்கு அவர் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் தவறான பெற்றுக்கொண்ட ஆதாயங்களை பிரிட்டனில் செலவிடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பிரிட்டன் ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை எந்த எதிர்கால அரசாங்கமும் ஆராயும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்