இலங்கையின் வாக்குறுதிகளை சர்வதேசம் நம்பாது

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்திலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
வேலைத்திட்டத்தில் நாம்  இதுவரை காலம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே
மீறப்பட்டுள்ள நிலையில், எதிர்காலம் குறித்து இலங்கை வழங்கும்
வாக்குறுதிகளை எவரும் நம்பப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகாரத்துறை
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்
இன்று (7)  விசேட கூற்றொன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை
தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக
கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது எமக்கு ஆதரவாக ஏழு நாடுகள்
வாக்களித்திருந்தாலும் கூட, இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடுகளாக
கருதும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும்
வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.அதேபோல் ஆசிய நாடுகள் எப்போதுமே
எம்முடன் இருந்தனர். ஆனால் இம்முறை இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும்
எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த மாற்றங்களுக்கு காரணம் என்னவென நாம்
ஆராய வேண்டும்.

குறிப்பாக நாம் கம்பீரமாக கொடுக்கும் வாக்குறுதிகளை இலகுவாக
மீறுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும். பயங்கரவாதத்தடை சட்டத்தை
மாற்றுவோம், அடிப்படை பிரச்சினைகளில் மாற்றங்களை கொண்டுவருவோம் என
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதற்கொண்டு சகலரும் வாக்குறுதிகளை
வழங்கியும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ளோம். அதுமட்டுமல்ல
உண்மைகளை கண்டறிய தேசிய பொறிமுறையொன்றை உருவாக்குவோம் என புதிய
வாக்குறுதியும் தற்போது  கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர்
கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ள நிலையில் இப்போது எதிர்காலம்
குறித்து கொடுக்கும் வாக்குறுதியை யார் ஏற்றுக்கொள்ளப்போவது என்ற கேள்வி
எழுந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்