இலங்கையின் இன்றைய நிலைமைக்கு அரசியல் தோல்வியே காரணம்- வேலு குமார்

நாட்டின் இன்றைய நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும்   என கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகளின் தோல்வி இன்று முழுமொத்தமாக வெளிப்படுகின்றது. இலங்கையின் அரசியலில் பெரும்பான்மை சார்ந்த தேசிய கட்சிகள் பிரதான இடம் வகித்து வந்துள்ளது. அதே போன்று, இனங்கள் சார்ந்ததாகவும், பிராந்தியங்கள் சார்ந்ததாகவும், சிறுபாண்மை கட்சிகள் உருவாகி இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக பல சிறு கட்சிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது. இன்றைய நாட்டின் நிலைமைக்கு, கட்சியை முன்னிலைப்படுத்திய அரசியலின் தோல்வியே காரணமாகும்.

நாட்டிற்கென தேசிய கொள்கை திட்டம் ஒன்றை வகுத்து, அதற்கமைய தூர நோக்குடன் எச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டிற்கென தேசிய கொள்கை ஒன்று இருக்கின்றதா? என கேட்டால், இல்லை என்பதே உண்மையாகும்.

மாறாக அரசியல் கட்சிகள் தமக்கென கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அவற்றையே முன்னிலைப்படுத்தி செயற்பட்டனர். காலத்திற்கு காலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுகின்றபோது, கொள்கையும், செயற்பாடுகளும் மாற்றமடைந்தது.

அது மட்டுமல்லாது, ஆட்சியமைப்பதற்காக கூட்டுசேரும் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்பவும், விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், கொள்கைகள், செயற்பாடுகள் மாற்றம் அடைந்தன. இவையனைத்தும் எமது நாட்டுக்கென நிலையான ஒரு கொள்கை வேலை திட்டம் இருக்கவில்லை என்பதையே மீண்டும் காட்டுகின்றது.

கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தி தெரிவாகும் உறுப்பினர்களுக்கு, நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்குரிய இடமளிக்கப்படவில்லை. மாறாக கட்சி கொள்கைக்கு கட்டுப்பட்டு, கட்சி முன்னெடுக்கும் செயற்பாட்டை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டனர்.

அதனையும் தாண்டி சிலர் தமது சுயநல தேவைகளை மையப்படுத்தியே செயற்பட்டனர். இன்று நாடு மீள முடியாத பிரச்சினைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறான சூழலிலும், கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதே பிரதானமாக நடைபெறுகின்றது.

கட்சி தலைவர்களிடையில் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது, தமது கட்சியின் பெரும்பானமையை தக்கவைத்துக்கொள்வது என இந்நிலைமை தொடருகின்றது. இந்நிலைமை மாறி, மக்கள் பிரதிநிதிகள் மக்களையும், நாட்டையும் முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய காலகட்டம் உருவாகி இருக்கின்றது. கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று செயற்பட்டாலே இன்று நாம் விழுந்திருக்கும் அதலபாதாளத்திலிருந்து மீள எழமுடியும்.”என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்