
தமிழக அரசினால் அனுப்பப்பட்ட இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளன.
தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரண பொருட்களை ஏற்றிய கப்பல் தூத்துக்குடியிலிருந்து நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை கொழும்பை வந்தடைந்தது.
அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட 15,000 தொன் நிவாரண பொருட்களை ஏற்றிய கப்பலை தமிழக அமைச்சர்களான கீதா ஜீவன் ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோர் நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு, கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த தீர்மானத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய, கடந்த மாதம் முதற்கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.