இலங்கைக்கு உதவ பல நாடுகளின் குழாம் (Consortium) தேவை

இலங்கை அரசியற் பரப்பில் மிகச் சிறப்பாகச் செயற்படும் அரசியற் தலைவரான மனோ கணேசன், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தொடக்கம் மனித உரிமை மீறல்களுக்கெதிரான அரசின் (படைத்தரப்பின்) நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும், போராடி வருகின்றவர், இலங்கை அரசியல் மாற்றங்கள் பலவற்றில் முன்னணியில் நின்று செயற்பட்டவர், செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ஆவார். பதவி, அதிகாரம் போன்றவற்றை இலக்கு வைக்காமல் மக்களுக்கான உரிமைகள், அவர்களுடைய பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு என்று சிந்திக்கின்ற, செயற்படுகின்ற முக்கியமானதொரு ஆளுமை. எந்தச் சூழலிலும் மிகத்துணிச்சலோடு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் அரசியற் செயற்பாட்டையும் முன்னெடுத்துச் செல்லும் முன்மாதிரியான அரசியற் பிரதிநிதி. பாராளுமன்றத்திலும் வெளியே மக்களிடத்திலும் ஊடகங்களிலும் துணிவோடு மக்களின் பிரச்சினைகளைப் பேசி, இனவாதத்தை எதிர்த்து, நியாயத்தை முன்வைத்து வருகின்ற  மக்களின் பிரதிநிதி. இதன் காரணமாக இன்றைய இலங்கை அரசியற் பரப்பிலே தமிழ், சிங்களம், முஸ்லிம், மலையக – இந்திய வம்சாவழியினர் என அனைத்துத் தரப்பு மக்களின் மத்தியிலும் தன்னுடைய அரசியல் கருத்தினாலும் செயற்பாட்டினாலும் அறியப்பட்ட தேசியத்தன்மை கொண்ட அரசியற் தலைவர். இவரை “எதிரொலி”க்காக நேர்கண்டபோது…

  1. இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியானது சமூகக் கொந்தளிப்பையும் மக்களின் வாழ்வியலில் பெரும் பாதிப்பையும் உண்டாக்கியுள்ள போதும் இதைக் குறித்து அரசாங்கத் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் போதிய – நியாயமான – அக்கறை காட்டப்படவில்லை என்ற கவலை மக்களிடம் உள்ளதே?

அரசையும், எதிரணியையும் ஒரே தட்டில் வைப்பது சரியல்ல.

“அரசு” என்ற ஒன்று இந்நாட்டில் இன்று கிடையாது. இருப்பது, அனுபவமற்ற, இனவாதம் புரையோடி போயிருக்கும், இராணுவ சிந்தனை கொண்ட, குறைந்தபட்சம் தன்னை தெரியாமல் தெரிவு செய்துவிட்ட மக்களுடன்கூட தொடர்பற்ற ஒரு தனி நபரின் ஆட்சி. இவரை விரட்டி உங்களில் ஒரு புதிய நபரை தெரிவு செய்துகொண்டால்தான் உங்களது தனிப்பட்ட அரசியல் எதிர்காலங்களையாவது காக்கலாம் என்று ஆளும் கட்சியின் பல இளம் எம்பிகளுக்கு  நான் ஆலோசனை கூறினேன். அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள்.  

எதிரணி அக்கறை காட்டுகிறதுதான். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். ஆகவே எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய முடியவில்லை என்பது உண்மை.

எந்த மக்கள்? என்ன கவலை? என்ன செய்ய? துட்டகைமுனுவின் அவதாரம் என்று அள்ளி வாக்களித்தவர்களின் குற்றம். பேரினவாத வரலாற்றின் குற்றம். இன்று வாக்களித்த ஒருவனையும், ஒருத்தியையும் தேடிப் பிடிக்க முடியவில்லை. அவர்கள்தான் அகோரமாக “கோதா-போ” என போராடுகிறார்கள்.    

  1. அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களும் நடவடிக்கைகளும் தோற்றுப் போய் விட்டன. இந்த இடத்தில் எதிர்க்கட்சி / எதிர்த்தரப்பிலுள்ள கட்சிகள் புதிய, பொருத்தமான மாற்றுத் திட்டங்களை ஏன் இன்னும் முன்வைக்கப்படவில்லை?

முன்வைத்துள்ளோம். அதில் உலகத்துக்கு பெரும் பங்கு உள்ளது. உலகின் நிதி உதவி தேவை. இன்றைய கடன்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். முதலில், உள்நாட்டின் பாரம்பரிய வெளிநாட்டு டொலர் நிதியை திரட்டும் துறைகளான, வெளிநாட்டு இலங்கையர்களின் நிதி அனுப்பீடு (Remittance),  சுற்றுலா (Tourism) ஏற்றுமதி  (Export) ஆகியவற்றை ஒழுங்கமைக்க வேண்டும். இன்று வெளிநாட்டு இலங்கையர்களின் நிதி சட்டபூர்வ வங்கிகள் மூலம் வருவதில்லை. மாதம் 800 மில்லியன் டொலர் வந்தது, இன்று மாதம் 200 மில்லியன் டொலர்தான் வருகிறது. இது ஒன்றே போதும். நம் நாட்டவர்களே நம் நாட்டு அரசு மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். வேறு என்ன சொல்ல?   கோதாபய இருக்கும்வரை நம்ம அரசை நம்ப நம்மவர்களே தயார் இல்லை.

சர்வதேசத்தில், ஒரு நாடு, இரு நாடுகள் அல்ல. இலங்கைக்கு உதவ பல நாடுகளின் குழாம் (Consortium) தேவை. ஆனால் அவர்களும், கோதாபய இருக்கும்வரை ஒரு சில மனிதாபிமான உதவிகளை தவிர பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள். வெளிநாடுகளும் நம்ம அரசை நம்ப தயார் இல்லை.

ஆகவே, இன்று இந்நாட்டில், இயல்பு நிலைக்கும், நெருக்கடி நிலைக்கும் இடையில் எருமை மாடாக நிற்பது கோதாபய ராஜபக்ச.  இந்த ஆளுக்கு இது விளங்கவில்லை. மண்டையில் கோளாறு. 

  1. நாட்டிலுள்ள, நாட்டுக்கு வெளியே உள்ள  துறைசார் நிபுணர்களையும் உலக அனுபவத்தையும் கொண்டு இந்த நெருக்கடியைத் தீர்பதற்கான உபாயங்களை மேற்கொள்ள முடியுமல்லவா? இதில் எதிர்த் தரப்பினர் எந்தளவுக்கு அக்கறையாக உள்ளனர்? எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளனர்?

இன்று இலங்கை நிலைமை தலைக்கு மேல் தண்ணீர் போய் மூழ்கி வருகிறது. இப்பொது ஆர அமர இருந்து ஆய்வு செய்ய நேரமில்லை.  உடனடியாக  பற்றி எரியும் தீயை அணைக்க வேண்டும்.  அதற்குதான் சர்வதேச நாணய நிதியம் வந்து பார்த்து பல நிபந்தனைகளை கூறி போயுள்ளது. வரி விதிப்பு, நிதி முகாமை, அரசு பணியாளர் குறைப்பு, மானியங்கள் வெட்டு என அடுத்து வரும் வாரங்களில் இவை தெரிய வரும்.    

சஜித் பிரேமதாச நிபுணர் குழுக்களை அமைத்து வருகிறார். ஆய்வு செய்து வருகிறார். ஆனால், அவற்றை அவர் ஆட்சிக்கு முழுபலத்துடன் வந்தால்தான் செய்வாராம். செய்ய முடியுமாம்.

4. இந்த நெருக்கடிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பரிந்துரை என்ன?

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதிகளை, பிரதமர்களை நேரடியாக உருவாக்கும் கட்சி அல்ல. எனக்கு தகைமை இல்லாமல் இல்லை. வந்து போன, வந்து இருக்கின்ற, வர கனவு காண்கின்ற,  ஜனாதிபதிகளை, பிரதமர்களை விட சிறந்த ,  ஜனாதிபதியாக, பிரதமராக பனி செய்ய எமக்கு முடியும். ஆனால், இந்த பாழாய்ப்போன இனவாத நாட்டில் இவற்றுக்கு உடனடி சாத்தியம் இல்லை.

ஆகவே நாம் இரண்டு காரியங்களை மட்டுமே செய்கிறோம். ஒன்று, நாம் பிரதிநிதித்துவம் செய்யும் எமது மக்களுக்கு, இந்த நெருக்கடியில் நிவாரண உதவிகளை தேடுகிறோம். இரண்டாவது, இந்த நெருக்கடி இருட்டில் தமிழர்களான எமது நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை தேடுகிறோம்.

இப்போது பாருங்கள், இந்திய அரசுடன் பேச்சு நடத்துகிறோம்.  அதன் மூலம்;

1)இந்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள், மக்களை நேரடியாக சென்று அடைவதை உறுதிப்படுத்தும்படி கோரியுள்ளோம்.

2)சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் உணவு பிரச்சினைக்கு தீர்வு தருவதற்கு முன்னுரிமை வழங்கும்படி கோரியுள்ளோம்.

3)நாடெங்கும் பெருந்தோட்டங்களில், உணவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விளிம்புநிலை குடும்பங்களுக்கு, கோதுமை மா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரியுள்ளோம்.

4)கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில் வாழும் நகர ஏழை பாமர மக்களுக்கு, சமூக சமையல் கூடங்களை அமைத்து “ஒருநாளைக்கு ஒருவேளையாவது” சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யும்படி கோரியுள்ளோம்.

இந்த கோரிக்கைகளை இந்திய தூதுவர் கோபால் பாகலேயும் சாதகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். மிக நெருக்கடியான காலகட்டத்தில் எதிர்க்கட்சியில் இருந்தபடி, இப்பணிகளை தமிழ் முற்போக்கு கூட்டணி செய்கிறது. எதிரணியில் இருந்தபடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சு நடத்தி இவை பற்றிய காரியங்களை செய்கிறோம்.

மற்றபடி, உலக வங்கி நாட்டில் ஸ்திரமான ஆட்சியும், நிரந்தர பொருளாதார மீளெழுச்சி திட்டமும் இருந்தால் மாத்திரமே உதவ முடியும் என கூறி விட்டது. அதேபோல் ஊழல், விரயம், பிழையான நிதி முகாமை ஒழிய வேண்டுமெனவும் கூறுகிறது.  சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆகியவையும் கூட குறைய கூறி வருகின்றன.  அவ்வப்போது உணவு, மருந்து என  உலகம் சிறு சிறு அளவில் உதவுகின்றதே தவிர,  பெரும் உதவிகள் கிடைக்க உடனடி வாய்ப்பு இல்லை.

எக்கச்சக்க கடனை வாங்கி, ராஜபக்ச  சகோதர்கள் அவற்றை வருமானம் வராத அரசியல் நோக்கம் கொண்ட துறைகளில் போட்டு விட்டார்கள். அதற்குள் மிகப்பெரும் ஊழல் (Corruption). மோசமான வீண்விரயம் (Wastage). பிழையான பொருளாதார நிர்வாக கொள்கை (wrong economic management policy) என்ற மூன்று காரியங்கள் நிகழ்ந்து விட்டன. இந்த மூன்றும்தான், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோதாபய ராஜபக்ச என்ற ராஜபக்ச சகோதரர்களுடன் கூடப்பிறந்த இன்னும் மூன்று ராஜபக்ச சகோதரர்கள் என்றும்கூட  சொல்லலாம்.  

“ஆகவே உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் சொல்வதை கேளுங்கள், மிஸ்டர் கோதாபய”  என தமிழ் முற்போக்கு கூட்டணி கூறுகிறது.

5. கோட்டபாய ராஜபக்ஸவை நீக்கி விட்டால் மாற்றங்கள் நிகழுமா? அப்படியென்றால் அது எந்த அடிப்படையில் நிகழும்? அதற்கான உத்தரவாதம் என்ன? ஏனென்றால் மகிந்த ராஜபக்ஸவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரணிலை நிறுத்தினால் எல்லாம் சரியாகும் என்று கூறப்பட்டது இன்று பொய்த்து விட்டது அல்லவா!

அரசியலில், ரணில் விக்கிரமசிங்க ஒரு Soft Killer. மஹிந்த ராஜபக்ச ஒரு Violent Killer. அதாவது மஹிந்த நேரடி யுத்தத்துக்கு போனார். அந்த யுத்தத்தில் தமிழ் புலிகளும் கொல்லப்பட்டார்கள். அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்கள் சாவது மஹிந்தவுக்கு பிரச்சினையாகவே  தெரியவில்லை. 

ஆனால், ரணிலின் பாணி வேறு. அவர்,  புலிகளை யுத்தத்தில் கொல்ல  போகவில்லை. புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்தார்.அதன் மூலம் காட்டில் தளம் அமைத்து போர் செய்த புலிகளை, நாட்டுக்குள் கொண்டு வந்து, போர் இல்லாத வாழ்வுக்கு அவர்களை பழக்கப்படுத்தி, புலிகளை பலவீனப்படுத்தினார்.  அதன்மூலம் புலிகளின் கிழக்கு மாகாண பிரதான தளபதி கருணாவை, புலிகளிலிருந்து பிரித்து எடுத்தார்.  இதை செய்து விட்டு ரணில் அமைதியாக இருந்தார்.  அதனால்தான் 2005ம் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து, புலிகள் ரணிலை தோற்கடித்தார்கள்.   

அதன்பின் மஹிந்த போரில் புலிகளை வெல்ல இந்த கருணாவின் பிரிவுதான் பிரதான காரணமாக அமைந்தது. போரில் வெற்றி பெற்று ராஜபக்ச சகோதர்கள் சிங்கள மக்கள் மத்தியில் “யாராலும் வெல்ல முடியாத புலிகளை வென்ற வீரர்களாக” புகழ் பெற்றனர்.

ஆனால், என்னை கேட்டால், போரில் புலிகள் தோற்க பிரதான காரணம், புலிகளை பிரித்த ரணில் விக்கிரமசிங்கதான் என்று உறுதியாக சொல்வேன். இதை அறிந்துக்கொண்டால்தான், இன்று இலங்கையில் ஆறாவது முறை பிரதமராக ஆகியுள்ள ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல்வாதியின் “காரக்டரை” புரிந்துக்கொள்ள முடியும். அதனால்தான் இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க, “நரி என அன்புடன்”  அழைக்கப்படுகிறார்.   

இப்போதும், ராஜபக்சர்களை காப்பாற்றவே இவர் பதவி ஏற்றார் என பரவலாக குற்றம் சாட்டுகிறார்கள். அது அத்துனை உண்மையல்ல. ரணிலுக்கு இன்று தேவை என்ன?  கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்த தன்னையும், அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் காப்பாற்றி, தூக்கி நிறுத்த வேண்டும். அவரது கட்சியை உடைத்துக்கொண்டு, வெளியே வந்து, புது கட்சி அமைத்து, நாட்டின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று செயல்படும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும். இவைதான் ரணிலின் பிரதான அரசியல் நோக்கங்கள். அதற்காக அவர் இன்று எதையும் செய்வார். அவரிடம் இப்போது இழக்க ஒன்றும் இல்லை. அவரை எவ்வளவு கழுவி, கழுவி ஊற்றினாலும் அவர் அலட்டிக்கொள்வதே இல்லை.  

வரும்போதே இந்த Soft Killer மஹிந்த ராஜபக்ச என்ற பிரதமரை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை பிடித்து உள்ளே வந்து விட்டார். இப்போது அமெரிக்க-இலங்கை இரட்டை பிரஜையான பசில் ராஜபக்சவை அகற்ற அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வர முயன்று, அது வரமுன்னரே  அவரை அகற்றி விட்டார். ராஜபக்சர்களின் ஆளும் கட்சியில் இருந்தே கணிசமான எம்பீகளை பிரிந்து எடுத்து வருகிறார். அவரது அடுத்த குறி ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவை நோக்கி திரும்பும். அவரை அனுப்பி விட்டு, காலியாகும் இடத்தில் ஜனாதிபதியாக அமர ரணில் கனவு காண்கிறார்.

தலை சுற்றுகிறதா? எனக்கு சுற்றாது. ஏனெனில் இந்த நரியை நான் நன்கறிந்தவன்.

  1. தோற்றுப்போன அரசை விரட்டுவதற்கு மக்களை அணிதிரட்டக்கூடிய சூழல் கனிந்துள்ள போதும் அதைச் செய்யாது எதிர்த்தரப்புகள் இன்னும் தாமதித்திருப்பதேன்?

தோற்றுப்போன அரசு என்று அரசியல் ரீதியாக நீங்களும், நானும் சொல்லலாம். ஆனால், தெருவில் மக்கள் அரசியல்ரீதியாக அப்படி சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். தமக்கு உணவு, பெட்ரோல், மண்ணெண்ணை, சமையல் வாயு தராத அரசு என பொருளாதாரரீதியில்தான் சிங்கள நாடு இந்த அரசை பார்க்கிறது.

அதுதான் சஜித், அனுர திசாநாயக்க அணிகளின் இன்றைய களநிலை பிரச்சினை.  என் கணிப்பு மிக சரியானது என நான் நம்புகிறேன்.  

பாருங்கள், உணவுக்காகவே இன்னமும் பெரிதாக கலவரம் ஏற்படவில்லை. ஆனால், அதற்கான சூழல் விரைவாக ஏற்பட்டு வருகிறது. ஆனால், பெட்ரோல், மண்ணெண்ணை, சமையல் வாயு போன்றவற்றுககாக மக்கள் மோதிக்கொள்ள தொடங்கி விட்டார்கள். வரிசைகளில், நான் முந்தி, நீ முந்தி என்றும், பெட்ரோல் தீர்ந்து விட்டால், பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்குவது என்றும், பெட்ரோல் கொண்டு வரும் லொறிகளை நிறுத்தி குழப்பம் விளைவிப்பது என்றும்,  சமையல் வாயு கலன்களை கொண்டுவரும் லொறியை  நிறுத்தி, கலன்களை அடாத்தாக தூக்கி செல்வது என்றும் கலவரங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன. பெட்ரோல் ஒழுங்காக தரவில்லை என்று சொல்லி ஒரு பெட்ரோல் நிலைய உரிமையாளர் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  

பொது மக்கள் பொலிசார் மோதல் பரவலாக ஏற்படுகிறது. முதல் மோதலில் போலிஸ் சுட்டதில் ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். இதனால் போலிஸ் மீது கடும் விமர்சனம் எழுந்தது. பொதுவாக உலகில் நல்ல பெயர் இல்லாத ஸ்ரீலங்கா போலீசாரும், இராணுவத்தினரும் இப்போது அசாத்திய பொறுமை காக்கின்றனர். இப்படியே போனால் மக்கள், கடைகளை, வர்த்தக அங்காடிகளை உடைப்பது போன்ற நிலைமைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்போது  ஸ்ரீலங்கா போலீஸ், இராணுவம் பொறுமை காக்குமா அல்லது சுடுமா அல்லது மக்களுடன் சேர்ந்து புரட்சி செய்யுமா என்று பல ஊகங்கள் நாட்டுக்குள்ளே உலவ தொடங்கி விட்டன.  

இங்கே எங்கே அரசியல் இருக்கிறது? நாளையே ரணில்உணவு, பெட்ரோல், மண்ணெண்ணை, சமையல் வாயு வரிசைகளை நிறுத்தி விட்டார் என்றால், அவரை தலையில் தூக்கி வைத்து சிங்கள நாடு கொண்டாடும்.  ஆகவே மக்களை அணிதிரட்டி மாற்றத்தை எதிரணி கொண்டு வரப்போகிறது என கனவு கண்டு நீங்கள் அவசரப்பட்டு கொண்டாடி விடாதீர்கள்.

7. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை – நிபந்தனைக்குக் கீழே நாடும் அதன் இறைமையும் கொண்டு வரப்படுவது எதிர்கால இலங்கையை மிக மோசமாகப் பாதிக்கும். இது மேற்கினதும் இந்தியாவினதும் பிடிக்குள் சிக்க வைக்கும் பொறி என்பதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

நீங்கள் பெரிய இலங்கையின் தேசபக்தர் போலும். மகிழ்ச்சி. பாராட்டுகள்.

ஆனால், இங்கே எங்கே தேசம் இருகிறது என்பதை எனக்கு காட்டுங்கள்? இலங்கையின் இறைமையா? அது எங்கே இருக்கிறது? அப்படியானால் ஈழத்தமிழர் இறைமை எங்கே இருக்கிறது? இந்நாட்டில் இன்றுவரை இருப்பது சிங்கள ஆட்சி உரிமையும், சிங்கள இறைமையும்தான். ஈழத்தமிழர் ஆட்சி உரிமையையும், இறைமையையும் இந்நாடு மிலிடரி சப்பாத்து காலில் போட்டு மிதித்து வைத்துள்ளது.  ஆகவே நடப்புகளை இப்படி எல்லாம் பாரக்க நான் தயாரில்லை.  

இலங்கைக்கு, இந்திய அரசுதான் இப்போது ஆபத்பாந்தவர்கள். ஏறக்குறைய 4 பில்லியன் (Billion) அமெரிக்க டாலர் பெறுமதியில் கடன்வழி (Credit Line) கடனாக சமீப காலத்தில் மட்டும் இந்தியா கொடுத்து உதவி இருக்கிறது. இன்று இலங்கையில் குறைந்தபட்ச அளவிலாவது கிடைக்கும் உணவு பொருட்கள், மருந்துவகைகள் முக்கியமாக பெட்ரோல் ஆகியவை கணிசமாக இந்திய ஒன்றிய அரசின் கடன் உதவிகள்தான்.

இலங்கையனாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனால், இலங்கை அரசுடன் ராஜதந்திர உறவுகளை கையாள்வது நடுவண் அரசுதானே. ஆகவே இலங்கை நாட்டில் நீண்ட காலமாக புரையோடி போயுள்ள தேசிய இனப்பிரச்சினை, மலையக தமிழர், ஈழத்தமிழர் தொடர்பான இலங்கை அரசின் பிழையான இனவாத கொள்கைகள் ஆகியவை மாற்றப்பட வேண்டிய நெருக்குதல்களை தர வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கை நெருக்கடியில்  விழுந்து இருக்கும் இவ்வேளைதான் இதற்கு பொருத்தமானது என்பதை நினைவூட்டுகிறேன்.

சர்வதேச நாணயநிதிய மேற்கினதும், இந்தியாவினதும் பிடிக்குள் சிக்க வைக்கும் பொறிக்குள் இலங்கையை சிங்கள பெளத்த பேரினவாதம் வீழ்த்தி விட்டது.  மேற்கும், இந்தியாவும் வந்து பிடிக்கவில்லை. தலையை விட்டு, வாலை பிடிக்காதீர்கள். இந்த பொறிக்குள் நுழைந்து தமிழர்களின் நீண்டகால அபிலாஷகளுக்கு நாம் பதில் தேடுவோம்.   

8. இலங்கை இப்படியே தொடர்ந்து சர்வதேசக் கடனிலும் நாடுகளின் உதவிகளிலும்  வாழ முடியுமா?

முடியாது. உள்நாட்டு மற்றும் தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தில் பெரும்பகுதி, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள், மற்றும் வெளிநாட்டு இலங்கையர்கள் அங்கு உழைத்து ஊருக்கு அனுப்பும் அமெரிக்க டாலர்கள்தான். இது இன்று வெகுவாக குறைந்து விட்டது. ஏற்றுமதியாளர்களும் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இலங்கைக்கு வெளியேயே நிறுத்தி வைத்துள்ளார்கள். ஏன்? இலங்கை அரசு மீது நம்பிக்கை  இல்லை. இன்று ரணில் வந்து அதை மாற்ற பார்க்கிறார்.

ஆனால்,  கோதாபய அரசு தலைவராக இருக்கும்வரை, தமது நிதியை இலங்கைக்கு வங்கிகள் மூலம் அனுப்ப, மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும்  ஏற்றுமதி தொழில் செய்யும் பெரும்பாலான சிங்களவர்களே தயார் இல்லை. இந்நிலையில்  புலம் பெயர்ந்த தமிழர்களை முதலீடு செய்ய அழைத்து, அதிபர் கோதாபய, இந்த நெருக்கடிக்கு இடையே சிரிப்பு காட்டுகிறார்.  “அதிபரே, நீங்க முதலில் வெளியே போங்க, நாங்க பணத்த உள்ளே கொண்டு வாறோம்” என நான் அவருக்கு சொல்கிறேன்.      

9. இவ்வளவு நெருக்கடியில் நாடு  சிக்கியுள்ளபோதும் இனவாதம் இன்னும் குறைவதாக இல்லையே! இந்த நெருக்கடிக்கு  இனவாதமும் அதன் விளைவான போரும் போருக்குப் பிந்திய பாரபட்ச அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகளும் காரணம் என்பதை இன்னும் எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே!

இதுவரை நீங்கள் தேசபக்தராக இருந்தீர்கள். இந்த ஒன்பதாவது கேள்வியில்தான் நீங்கள், “நமது” விடயத்துக்கு வந்துள்ளீர்கள்.  

இந்த நெருக்கடி பொருளாதார சிக்கலினால், அதுவும் கோதாபயவுக்கு வாக்களித்த சிங்கள பெருந்திரள் மக்களின் வயிற்றில் அடி விழுந்ததால்தான் ஏற்பட்டு, போராட்டங்கள் நிகழ்கின்றன. ராஜபக்சர்கள் ஆட்சியில், போர் குற்றம் நிகழ்ந்தது, போர் தளத்துக்கு வெளியே எனது கொழும்பு மாவட்டத்தில் ஆட்கடத்தல், படுகொலைகள் நிகழ்ந்தன, சுனாமி நிவாரண நிதி தனிப்பட்ட வங்கி கணக்கில் வைப்பிடப்பட்டது போன்ற காரணங்களால் இவர்கள் எவரும் போராடவில்லை.

ஆனால், காலிமுக போராட்டம் மூலமாகத்தான் மகிந்த பிரதமர் பதவியில் இருந்து போனார். பசில் பாராளுமன்றத்தில் இருந்து போனார். மகிந்தவின் அமைச்சரவை பெருச்சாளிகள் பதவி இழந்தார்கள். இதை சஜித், அனுர, மைத்திரி, ரணில் ஆகிய பெரும்பான்மை கட்சி தலைவர்களோ, அவர்களது கட்சிகளோ செய்யவில்லை.  காலிமுக போராட்ட இயக்கம்தான் செய்தது. இது பட்டவர்த்தன உண்மை.

இந்த நெருக்கடி இருட்டில் நாம், தமிழர்கள், தமிழ் தலைமைகள்தான் எமக்கான வெளிச்சத்தை  தேட வேண்டும். இந்த காலிமுக போராட்டம் மூலமாக ஏற்பட்டுள்ள இடைவெளியை (Space) பயன்படுத்த வேண்டும்.  பயன்படுத்த இப்போது நாம் ஆரம்பித்துள்ளோம். காலிமுக போராட்ட இயக்க இளைஞர் குழுக்களுடன் தனித்து தமிழ் கட்சிகள் மாத்திரம் கலந்துரையாட போகிறோம். எமது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை நாம் எழுத்து மூலமாக அவர்களுக்கு வழங்க போகிறோம். வடக்கு, கிழக்கு, மலையக கட்சி பிரதிநிதிகள் அனைவரும் இதற்கு அழைக்கப்படுவார்கள். இதை நான் ஏற்பாடு செய்கிறேன். அடுத்த வாரம் அளவில் இந்த சந்திப்பு நடைபெறும்.             

10. நீங்கள் பல அரசியல் மாற்றங்களுக்குப் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். இப்பொழுதும் அப்படியான அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்படுகிறது. இதை நீங்கள் எவ்விதம் நிறைவேற்றப்போகிறீர்கள்? 

ஒன்பதாவது கேள்விக்கான பதிலில், இக்கேள்விக்கான பதிலும் இருக்கிறது.  

11. இலங்கையின் இன்றைய வீழ்ச்சிக்கு ராஜபக்ச சகோதர்கள்தான் முழு காரணம் என்று கூறுகிறீர்களா?

இல்லை. நான் அப்படி சொல்லவில்லை.

1948ம் ஆண்டில் பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது, எமது நாட்டின் அந்நிய செலாவானி கையிருப்பு,  பிரித்தானிய பவுண்ட் நாணயத்தில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்து இருந்தது. அப்போது நாம் ஒருமுறை இரண்டாம் உலக யுத்தத்தில் தோய்ந்து போயிருந்த ஜெர்மனிக்கு கைமாற்று கடன்கூட கொடுத்துள்ளோம் என்ற வரலாறு இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இந்த எக்கச்சக்க பிரித்தானிய பவுண்ட் அந்நிய செலாவணி கையிருப்பு எப்படி இலங்கைக்கு கிடைத்திருந்தது என்பதை பற்றி வேறு எவரையும் விட நாம் அறிய வேண்டும்.

1823ம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷார் இலங்கையில் தேயிலை. இறப்பர், கோப்பி என்ற பெருந்தோட்டங்களை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, ஒரு பிரமாண்டமான ஏற்றுமதி பொருளாதார கட்டமைப்பை இலங்கையில் உருவாக்கினார்கள். இந்த பெருந்தோட்டங்களை உயிரை கொடுத்து, இரத்தம் வியர்வை சிந்தி, உருவாக்கிய உழைப்பாளிகள், இன்று இலங்கையில் வாழும் பதினைந்து  இலட்சம் தமிழக வம்சாவளி மலையக தமிழர்களின் முன்னோர்தான். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்ட நமது தமிழ் மக்களின் உழைப்பினால்தான் இந்த எக்கச்சக்க பிரித்தானிய பவுண்ட் அந்நிய செலாவணி கையிருப்பு ஏற்பட்டது. நல்லெண்ணம் கொண்ட பிரிட்டிஷார் போகும் போது கணிசமான தொகையை சுதந்திர இலங்கைக்கு பரிசாக கொடுத்து விட்டு போனார்கள்.

ஆனால்,  சுதந்திரம் பெற்றதுமே சிங்கள இனவாதிகள் செய்த முதல் வேலையே நன்றிக்கெட்டத்தனமாக, இந்த மலையக தமிழர்களில் சரிபாதிக்கு மேற்பட்டோரை இந்தியாவுக்கு ஆடு, மாடுகளை போல நாடு கடத்தியதுதான். இதற்கு இந்திய நடுவண் அரசும் உடன்பட்டு எமக்கு துரோகம் செய்து விட்டது. இவை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.   

இந்த சிங்கள-பெளத்தவாதம்தான், அதன் பின் சிங்கள மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லி, மலையக தமிழரில் ஆரம்பித்து, ஈழத்தமிழரையும் ஒடுக்கி, இனவாத ஸ்ரீலங்காவை உருவாக்கி, அதன் விளைவாக, ஆயுதப் போர், நடந்து, இலட்சக்கணக்கில் தமிழரை கொன்று, யுத்தத்துக்கு என்று நிதியை விரயம் செய்து, கடைசியில் யுத்த வெற்றியை ஒரே காரணமாக கொண்டு, வரலாற்றில் ஒருபோதும் இல்லாத சிங்கள வாக்குகளுடன், ஒரு தகைமையும் இல்லாத ராஜபக்ச சகோதரர்களிடம், நாட்டை தந்து, அவர்கள் கொளையடித்து, இன்று இங்கே வந்து நிற்கிறது. இன்று இது, சிங்கள இனவாதிகளுக்கும், அவர்களை நம்பிய சிங்கள மக்களுக்கும், செய்த பாவங்களுக்காக மீள செலுத்தும் காலம் (Pay Back Time) என நினைக்கிறேன்.                    

ஜப்பானுக்கு அடுத்து அதிக அந்நிய செலாவணியை பிரித்தானிய பவுண்டில் வைத்திருந்த இலங்கை, இன்று பிச்சைக்கார நாடு. எனது தாய் நாட்டை பற்றி இப்படி சொல்ல நான் வெட்கப்படுகிறேன். ஆனால், இதுதான் மெய். உண்மையை மறைத்து பேச என்னால் முடியாது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் உண்மையை உரக்க கூற வேண்டும் என்பது எனது கொள்கை.  

12. சிறுபான்மையின மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிறுபான்மை இனங்களின் தலைவர்களும் கட்சிகளும் என்ன செய்ய வேண்டும்?

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும்..! சொல்வதற்கும், கேட்பதற்கும் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இதுதான் உண்மை.

மாற்றம் வர வேண்டும் என்றால் ஒரு நெருக்கடி ஏற்படவேண்டும். அது ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத்தில் ஆரம்பித்து, அரசியல், சமூகம், கலாச்சாரம் என்று சிங்கள மக்களின் எல்லா அம்சங்களையும் இது இன்று பாதித்து வருகிறது. இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுகளில் இது நிகழ்கிறது.  

இதில் நாம் நுழைந்து ஒரே நாட்டுக்குள்ளே எப்படி சமத்துவமாக வாழ்வது,  வரலாறு முழுக்க எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு எப்படி தீர்வுகளை தேடுவது என்பன பற்றி ஆராய வேண்டும். புதிய கூட்டுகளை உருவாக்க வேண்டும். இந்த நெருக்கடியின் பின் எமது எல்லா பிரச்சினைகளக்கும் தீர்வு கிடைத்து விடும் என நான் நம்பவில்லை. ஆனால், பல மைல் தூரம் நாம் முன்னே வரலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.  நெருக்கடியின் பின் வரும் மாற்றம் முற்போக்கான மாற்றமாக வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அதை விடுத்து, நமது சில பண்டிதர்களை (உண்மையான பண்டிதர்கள் மன்னிக்க…) போல் சிங்கள நாட்டின் கஷ்டத்தை துடைக்க தமது பொருளாதார, அரசியல், சட்ட, குடியியல், வாழ்வியல், மேதவிலாசங்களை காட்ட முயலக்கூடாது. தேசிய பிரச்சினைகளை பேசி, பேசி, சிங்கள் மக்களிடம் கைத்தட்டு வாங்குவதில் ஒரு மண்ணும் எமக்கு கிடைக்க போவதில்லை. உண்மையில் இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும்  மூல கரணம் தீராத தேசிய இனப்பிரச்சினை, அதையடுத்த யுத்தம். யுத்த வெற்றியாளருக்கு சிங்களம் வழங்கிய எதையும் செய்யலாம் என்ற “சட்ட விலக்கு லைசன்ஸ்” என்பவைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்