இறத்தோட்டை – தங்கந்த ஆற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

மாத்தளை – இறத்தோட்டை பகுதியில் கடந்தோடும் தங்கந்த ஆற்றில், உயிரிழந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

இறத்தோட்டையில் முன்னெடுக்கப்படுகின்ற நீர் விநியோக திட்டத்திலிருந்து திறந்து விடப்பட்ட நீர் தங்கந்த ஆற்றில் கலந்துள்ளது.

இதனையடுத்து, மீன்கள் உயிரிழந்துள்ளதுடன், நீரை பாவிக்கும் பிரதேச மக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நீர் துர்நாற்றம் வீசுவதாகவும் பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

நீர் வடிகாலமைப்பு சபையால் திறந்துவிடப்பட்ட குளோரின் கலந்த நீரால், ஆற்று நீர் மாசடைந்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மவுசாகல நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்தின் உதவி பொறியியலாளர் S.P.கருணாதிலக்கவிடம் வினவியபோது,

சுத்திகரிக்கின்ற 9000 கன லிட்டர் நீரை 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் எமது குளாய்களூடாக அகற்ற வேண்டும். ஆனால், எமக்கு 400 தொடர்புகளே வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த நீரை வௌியேற்ற முடியாது. ஆகவே, நாம் இந்த நீரை ஆற்றில் திறந்து விட தீர்மானித்தோம். நீர் வௌியேற்றப்பட்ட மறு தினமே இந்த ஆற்றில் மீன்கள் உயிரிழப்பதாக அறிந்தோம். பின்னர் உடனே அதனை நிறுத்திவிட்டு, 15 கிலோமீட்டர் தொலைவில், ஆற்றுக்குள் திறந்து விடாமல், சூழலுக்கு திறந்து விட்டுள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது.

என அவர் குறிப்பிட்டார்.

இறத்தோட்டை பிரதேசத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், GREATER MATALE என்ற திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நீர் வடிகாலமைப்பு சபைக்கு பாரமளிக்கப்பட்டுள்ளதால், அந்த திட்டத்தினர் குளோரின் கலக்கப்பட்ட 9000 கன லிட்டர் நீரை பரிசோதிக்கும் முகமாக தங்கந்த ஆற்றில் விடுவித்துள்ளார்கள்.

இதனால், ஆற்றின் பல வகையான மீன் இனங்கள் பாரியளவில் இறந்துள்ளன.

இதனையடுத்து, குறித்த திட்டம் தடை செய்யப்பட்டுள்ளதாக இறத்தோட்டை பிரதேச செயலாளர் F.R.M. ரியால்தீன் கூறினார்.

சுற்றாடல் திணைக்களம், நீரியல் வள திணைக்களம் ஆகியவற்றின் அனுமதியுடன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களின் அத்தியாவசிய தேவை கருதி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கதே.

எனினும், அவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதிருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்