இருபதுக்கு இருபதில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது சிம்பாபே

பேர்த், மேற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (27) கடைசிவரை விறுவிறுப்பைத் தோற்றுவித்த ஐசிசி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட  சிம்பாபே, இந்த வருட உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய தலைகீழ் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்தது.

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய  முதல் சந்தர்ப்பத்திலேயே சிம்பாபே வெற்றிபெற்று பெருமை தேடிக்கொண்டது.

அத்துடன் எட்டாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பாகிஸ்தான் அடுத்தடுத்த போட்டிகளில் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் சிம்பாபே பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

சிம்பாபேயினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று  முற்றிலும் எதிர்பாராத தோல்வியைத் தழுவிக்கொண்டது.

சிம்பாபேயைப் போன்று பாகிஸ்தானின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அணித் தலைவர் பாபர் அஸாம் (4), மொஹமத் ரிஸ்வான் (14), இப்திகார் அஹ்மத் (5) ஆகியோர் ஆட்டமிழக்க 8ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து 14ஆவது ஓவரில் ஷதாப் கான் (17), ஹய்தர் அலி (0) ஆகிய இவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷான் மசூத் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் பெரும் நெருக்கடிக்குள்ளானது. (94 – 6 விக்.)

கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதமிருந்தது.

இங்கராவா வீசிய 17ஆவது ஓவரில் 3 ஓட்டங்களும் முஸராபனி வீசிய 18ஆவது ஓவரில் 7 ஓட்டங்களும் பெறப்பட்டன. ஆனால் இங்கராவா வீசிய 19ஆவது ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ப்றெட் இவான்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 2, 4, 1 என ஓட்டங்கள் பெறப்பபட்டது  . ஆனால், 4ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மொஹமத் நவாஸ், 5ஆவது பந்தை மிட் ஒவ் நிலைக்கு மேலாக அடிக்க முயற்சித்து ஏர்வினிடம் பிடிகொடுத்து 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

அதுவே ஸிம்பாபே அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. 

கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தும் நோக்கில் 2ஆவது ஓட்டத்தை எடுக்க முயற்சித்த ஷஹீன் ஷா அப்ரிடி, ரன் அவுட் ஆக, ஒரு ஓட்டத்தால் பாகிஸ்தான் தொல்வி அடைந்தது.

ஸிம்பாபே பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெட் இவான்ஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதைத் தெரிவு செய்த ஸிம்பாபே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி மெதேவியர் (17), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (19) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு  ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது மில்டன் ஷும்பா 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து 14ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 95 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால் அதே மொத்த எண்ணிக்கையில் நான்கு விக்கெட்டுக்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சரிந்தன.

13ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுக்களையும் 14ஆவது ஓவரில் 3ஆவது, 4ஆவது பந்துகளில் 2 விக்கெட்டுக்களையும் இழந்ததால் ஸிம்பாபே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

சோன் வில்லியம்ஸ் (31), ரெஜிஸ் சக்கப்வா (0), சிக்கந்தர் ராஸா (9), லூக் ஜொஹ்வே (0) ஆகியோரே அடுத்தடுத்து ஆட்டமிழந்தவர்களாவர். (95 – 7 விக்.)

இந் நிலையில் ரெயான் பியூரி (10 ஆ.இ.), ப்றட் இவான்ஸ் (19) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.

ரிச்சர்ட் இங்கராவா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் வசிம் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்