இரானின் ராணுவ பலம் என்ன? அமெரிக்கா கவலை கொள்ள வேண்டுமா?

இராக்கில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமானத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின்

இரானின் ராணுவ பலம் பற்றி நமக்கு என்ன தெரிந்திருக்கிறது?

இரானிடம் என்ன மாதிரியான ஏவுகணைகள் உள்ளன?

இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற இரானின் எதிரி நாடுகளுடன் ஒப்பிடும்போது விமானப் படையின் பலம் குறைவாக இருந்தாலும், இரானின் ஏவுகணை பலம் அதன் ராணுவ பலத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக அளவிலான ஏவுகணைகளை இரான் வைத்திருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் மற்றும் நடுத்தர தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அதிகமாக உள்ளன. ஏவுகணைகள் இன்னும் வேகமாக பயணிப்பதற்காக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் நோக்கில், தங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இரான் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

  • நாங்கள் கோழை அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளை தாக்குவோம்: இரான் அமைச்சர் பேட்டி
  • இரானில் நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்: ‘பயணித்த 176 பேரும் பலி’

இருந்தபோதிலும், 2015ல் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தை இரான் நிறுத்தியுள்ளது என்று ராயல் யுனைடெட் சர்வீஸஸ் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் உறுதியானதாக இருக்குமா என்ற சந்தேகமான சூழ்நிலையில், ஏவுகணை தயாரிப்பை இரான் மீண்டும் தொடங்கி இருக்கலாம் என்றும் அது கூறுகிறது.

காசெம் சுலேமானி கொலைக்கு பிறகு 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என இரான் அறிவித்துள்ளது.

எப்படி இருந்தாலும் சௌதி அரேபியா மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள பல இலக்குகள் இரானிடம் இப்போதுள்ள குறுகிய தொலைவு மற்றும் நடுத்தர தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளின் பயண திறன்களுக்கு உள்பட்ட எல்லையில் தான் இருக்கின்றன. இஸ்ரேலில் உள்ள இலக்குகளும் இதே வரம்பில் உள்ளன.

இரானுடன் மோதல் பதற்றம் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா பேட்ரியாட் எனப்படும் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தியது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன விமானங்களை இடைமறித்து தாக்குவதற்காக இந்த பேட்ரியாட் ஏவுகணை பயன்படுத்தப்படுகின்றன.

இரானின் ராணுவம் எவ்வளவு பெரியது?

இரான் ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் 523,00 வீரர்கள் இருப்பதாக, பிரிட்டனை சேர்ந்த சர்வதேச ராணுவ ஆய்வுகள் நிலையம் கூறியுள்ளது.

இதில் வழக்கமான ராணுவப் பணியில் உள்ள 350,000 பேரும், இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் (ஐ.ஆர்.ஜி.சி.) உள்ள 150,000 பேரும் அடங்குவர்.

ஐ.ஆர்.ஜி.சி.யின் கடற்படைப் பிரிவுகளில் 20,000 பேர் உள்ளனர். ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆயுதம் ஏந்திய கண்காணிப்புப் படகுகளை இந்தக் குழு இயக்கி வருகிறது. 2019ல் வெளிநாட்டுக் கொடிகளுடன் வந்த ஏராளமான வெளிநாட்டு டேங்கர் கப்பல்கள் மறிக்கப்பட்ட பகுதி இதுவாகும்.

உள்நாட்டு புரட்சியை ஒடுக்குவதற்கு உதவிய தன்னார்வலர் படைப் பிரிவான பாசிஜ் பிரிவையும் ஐ.ஆர்.ஜி.சி. கட்டுப்படுத்துகிறது. இந்த படைப் பிரிவு பல நூறாயிரம் பேரை திரட்டும் திறன் கொண்டது.

இரானில் இஸ்லாமிய அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஆர்.ஜி.சி. உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து முக்கியமான ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக அது செயல்பட்டு வருகிறது.

வழக்கமான ராணுவத்தைவிட இதில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், இரானில் வலிமையான ராணுவ படைப் பிரிவாக இது கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜெனரல் காசெம் சுலேமானி தலைமையில் செயல்பட்டு வந்த ‘குட்ஸ்’ படைப் பிரிவு, ஐ.ஆர்.ஜி.சி.க்காக வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

நேரடியாக இரான் அதிபர் அயதுல்லா அலி காமேனியுடன் தொடர்பில் உள்ள பிரிவு. அதில் 5,000 பேர் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பிரிவு சிரியாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சிரிய அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு விசுவாசமான ராணுவத்தினருக்கும் மற்றும் ஷியா பிரிவின் ஆயுதப் போராளிகளுக்கும் ஆலோசனைகள் அளித்தது. இராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க உதவிய ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட துணை நிலை ராணுவத்தினருக்கு அந்தப் பிரிவு ஆதரவு அளித்தது.

இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் உள்ள பயங்கரவாத குழுக்கள் என்று வாஷிங்டன் அறிவித்துள்ள அமைப்புகளுக்கு நிதி, பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் அளிப்பதில் குட்ஸ் பிரிவு பெரும்பங்கு வகிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனத்தின் இஸ்லாமியவாத ஜிகாத் ஆகியவை இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இரான் ராணுவம் சிறியது என்றாலும், பொருளாதார தடைகள் காரணமாக, இரானின் ஆயுத இறக்குமதி பாதிக்கப்பட்டது.

2009க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் இரான் பாதுகாப்புத் துறை இறக்குமதிகள், அதே காலக்கட்டத்தில் பாதுகாப்புத் துறை இறக்குமதிக்கு சௌதி அரேபியா செலவிட்ட தொகையில் 3.5 சதவீதம் மட்டுமே என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இரானின் பெரும்பாலான தளவாட இறக்குமதிகள் ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து வந்துள்ளன.

இரானிடம் இப்போது அணு ஆயுதத் திட்டம் எதுவும் இல்லை. தங்களுக்கு அது தேவையில்லை என்று முன்பு ஈரான் கூறியுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான பல சாதனங்கள் இரானிடம் உள்ளன.

  • சுலேமானீ இறப்பு : கண் கலங்கிய இரான் அதிஉயர் தலைவர்
  • அமெரிக்கா- இரான் மோதல் : ஆட்சி கவிழ்ப்பு முதல் அணு ஒப்பந்தம் வரை

ராணுவ பயன்பாட்டுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் ஈரானிடம் உள்ளது. அணு ஆயுதம் தயாரிக்கும் அணுசக்திப் பொருளைத் தயாரிக்க இரானுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் மட்டும் போதும் என்று 2015ல் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்கா கணித்து வைத்திருந்தது.

அந்த ஆண்டில் இரானுக்கும், ஆறு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரானின் அணு சக்தி செயல்பாடுகளுக்கு வரம்புகளும், சர்வதேச பரிசோதனை முறைகளும் அமலுக்கு வந்தன.

அந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் விலகிக் கொண்டார். ஆயுதம் தயாரிப்பதற்கான செறிவான பொருள் தயாரிப்பதை கடினமானதாகவும், அதிக காலம் தேவைப்படும் விஷயமாகவும் மாற்றும் வகையில் அந்த ஒப்பந்தம் உள்ளது.

ஜெனரல் காசெம் சுலேமானி கொலை செய்யப்பட்டதை அடுத்து, தாங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இரான் கூறியுள்ளது. ஆனாலும், அணு சக்தி செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஐ.நா.வின் ஐ.ஏ.இ.ஏ. அமைப்புக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையிலும், இரானும் ஆளில்லா விமானங்களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது.

இராக்கில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான போரில் 2016ல் இருந்து இரானின் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. சிரியாவில் இருந்து இயக்கப்பட்ட, ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலின் வான் எல்லைக்குள்ளும் சென்றன என்றும் ராயல் யுனைடெட் சர்வீஸஸ் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.

2019ல் ஆளில்லா விமானம் மூலம் நடந்த தாக்குதலில் சௌதியில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிணறு வளாகங்கள் சேதமடைந்தன. இரான் தான் அந்தத் தாக்குதலை நடத்தியது என்று அமெரிக்காவும், சௌதியும் குற்றஞ்சாட்டின.

ஆனால் அதில் தங்களுக்குப் பொறுப்பு இல்லை என்றும், ஏமனில் உள்ள கலகக்காரர்கள் தான் அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்றும் இரான் கூறியது.

இரானின் இணையவழி தாக்குதல் திறன் எவ்வளவு?

2010ஆம் ஆண்டில் இரானின் அணுசக்தி மையங்கள் மீது இணைய வழி தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கணினி வழி பாதுகாப்பு முறைமைகளை இரான் பெரிய அளவில் மேம்படுத்திக் கொண்டுள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி. பிரிவு தனக்கென ஒரு கணினி கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும், வணிக மற்றும் ராணுவ உளவு பணிகளுக்கு அதைப் பயன்படுத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

2012ல அமெரிக்க வங்கிகள் மீது தொடர்ச்சியாக இணைய வழி தாக்குதல்களை இரான் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அவர்களுடைய இணையதள சேவைகளை முடக்கும் நோக்கில் அந்தத் தாக்குதல்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகம் முழுக்க தங்களுடைய இணைய வழி உளவு பணிகளுக்கு, விமான தயாரிப்பு நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனங்கள், எரிசக்தி மற்றும் இயற்கை வள ஆதார நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களை இரான் குறிவைத்துள்ளது என்று 2019ல் அமெரிக்க ராணுவ அறிக்கை தெரிவித்தது.

இரான் அரசுடன் தொடர்பு உள்ள மற்றும் இரானில் இருந்து செயல்படுத்தப்பட்ட ஹேக்கர் குழு ஒன்று, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தைக் குறி வைத்து, அமெரிக்க அரசு அதிகாரிகளின் கணக்குகளில் நுழைய முயற்சி செய்தது என்று 2019ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்