இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ள இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்த ஹசரங்கவின் இடுப்புப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. அப் போட்டியில் அதிரடியாக 37 ஓட்டங்களைப் பெற்ற ஹசரங்க, பந்துவீச்சில் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

இரண்டாவது போட்டியில் அவர் விளையாடதது இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என கருதப்படுகிறது. வனிந்து ஹசரங்கவுக்குப் பதிலாக சில வேளைகளில் சுழற்பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே அணியில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் பானுக்க ராஜபக்சவை அணியில் சேர்த்து தனஞ்சய டி சில்வாவை சுழல் பந்து வீச்சில் முழுமையாக ஈடுபடுத்த அணி முகாமைத்துவம் ஆலோசித்து வருகின்றது.

தனஞ்சய டி சில்வா துடுப்பாட்டத்தில் தனது ஆற்றலை 100 வீதம் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். தனது அறிமுகப் போட்டியில் முக்கிய விக்கெட்டான ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த துனித் வெல்லாலகே, இரண்டாவது போட்டியில் 10 ஓவர்களும் பந்துவீச அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவுடனான தொடரில் இலங்கையின் துரும்புச் சீட்டாக சுழல்பந்துவீச்சு அமைகின்றது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீரவும் சாமிக்க கருணாரட்னவும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்த முயற்சிப்பது அவசியமாகும். இலங்கை முன்வரிசை துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் திருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது .

மேலும் முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்த முயற்றிக்கும் என நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய அணியின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஏஷ்டன் அகார் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக அவர்களும் இரண்டாவது போட்டியில் விளையாடமாட்டார்கள்.

அணிகள் (பெரும்பாலும்) இலங்கை: தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டர்சே அல்லது பானுக்க ராஜபக்ச.

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), ஸ்டீவன் ஸ்மித், மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட் அல்லது ஜொஷ் இங்லிஷ், க்ளென் மெக்ஸ்வெல், பெட் கமின்ஸ், ஜய் ரிச்சர்ட்சன், மிச்செல் ஸ்வெப்சன், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்