இரகசிய அறிக்கை இன்று நீதிமன்றிடம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று வழங்கியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.

அதன் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அறிக்கையை இன்றையதினம் (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒக்டோபர் 13ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிக்கையை மீளப்பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானத்தை எதிர்த்து, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெறுவதற்கான தீர்மானம் நியாயமற்றது, பாரபட்சமானது, சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இயற்கை நீதி விதிகளுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்டது என மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராஜீவ் நாகநாதன், விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் திலான், மொஹமட் சஜித் உள்ளிட்ட 5 பேர், 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போயுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேற்கண்ட காணாமல் போனவர்களுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட சில கடற்படையினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்