இயற்கையின் மனமாற்றம்-அன்ரன் கொலின்ஸ்


சுற்றுச்சூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கைச் சூழலின் சிறப்பம்சத்தைக் குறிக்கின்றது. பல சமயங்களில் சுழல் என்ற சொல் இயற்கை சுற்றுச்சூழலையே சுட்டிக்காட்டுகின்றது. நம்மைச்சுற்றி காணப்படும் உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தொகுப்பைப்பற்றி சிந்திப்போம். பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் நாம் நோக்கும் போது தீமைகளே அதிகம் இருக்கின்றன. பண்டைக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிறைந்த முழுமையான உணர்வை பெற்றிருந்தான். அவனிடம் தொலைநோக்குப்பார்வை தன்னலமற்ற தன்மை நிறைந்து தென்பட்டது. அதன் விளைவாய் நல்ல சூழ்நிலையை உருவாக்கி அவர்கள் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து காட்டினார்கள். இன்றைய நிலையில் மெஞ்ஞானம் விஞ்ஞானம் தலைதூக்கி நிற்கின்றது. கேள்விகளே அறிவின் விழிப்பு நிலை என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைதி காணாமல் போயுள்ளது வெற்று ஆரவாரங்கள் தலைதூக்கியுள்ளது. பொதுநலமற்ற தொலைநோக்குப் பார்வையற்ற சுயநலமான சமூதாயம் இயற்கை தன் இஸ்திரத்தன்மையை இழக்க காரணமாகின்றது.
நிலத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகளும் அணுகழிவுகளும் செயற்கை உரங்களும் பிற நச்சுப்பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் நச்சு கலந்திருப்பதால் மனிதனின் உடலிலும் கலந்து விடுகின்றது. குழந்தைக்கு ஊட்டப்படும் தாய் பாலில் கூட இந்த காய்கறிகளின் நச்சு கலந்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. தண்ணீரை மாசுபடுத்துவது என்பது நிலத்தடி நீரை மாசுhடச் செய்யும் தேங்கி நிற்கும் தண்ணீருக்கு சரியான வடிகால் வசதிகள் இல்லாமல் போவதால் தண்ணீர் மாசுபடுகின்றது. உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு மட்டுமே நாம் பயண்படுத்தும் குடிநீர் ஆகும். அந்த தண்ணீரும் தற்போது குறைந்து மாசுபட்டும் வருவது உயிரினத்துக்கே கேடு விளைவிக்க கூடியதாகும்.
பூமி சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது இந்த ஆற்றலின் ஒரு பகுதி வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கின்றது. வாயு மண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச்சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தது போன்று பரவியுள்ளன. உயர்ந்து வரும் வெப்பநிலை மழை பெய்யக்கூடிய நிலவரங்களை மாற்றக்கூடியது. வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படுதலை அதிகரிக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் மற்றும் துருவப்பனிப் படிவங்கள் உருகுவது அதிகரிப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் புயல் சூறாவளி போன்றவற்றிக்கும் வெப்பநிலை மாற்றங்களின் விளைவுகளே காரணம்.
கடல்நீர் வெப்பமடைதல் பனிப்பாறைகள் மற்றும் போலர் பனிப்படிவுகள் உருகுதலால் அடுத்த நூற்றாண்டுக்குள் சுமார் அரைமீட்டர் அளவுக்கு கடல்மட்டம் உயரப்போகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வதால் மணல் அரிப்பு ஏற்பட்டு நிலப்பகுதிகள் கடலில் மூழ்குதல் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது அதிகரித்து நீர் நிலைகள் உவர்ப்பாக மாறுதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படும் ஓசோன் படலம் துருவப்பகுதியில் வானில் விழுந்துள்ள ஒசோன் ஒட்டை இன்னொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
காற்றில் ஏற்படும் மாசு (குளோரோ புளோரோ காபன்) இதன் முக்கிய காரணியாக விளங்கும் அதே நேரத்தில் குளிர்சாதனப்பெட்டி தானியங்கு விற்பனை இயந்திரங்கள் போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாயுவும் இந்த ஒசோன் ஒட்டைக்கு குறிப்பிடத்தக்க காரணமாக விளங்குகிறது. புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியை பாதுகாக்கும் ஒசோன் படலம் வலுவழப்பதால் தோல்புற்று நோய் உட்பட்ட பல்வேறு நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றது.
இதனால் தான் இயற்கையில் மனமாற்றம் அனைவருக்கும் ஓர் கட்டாயமாக இருக்கின்றது. கலாச்சார ஆபத்து மிக ஆழமானது. பழக்க வழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. கல்வியும் பயிற்சியும் இன்றி மாற்றங்கள் இயலாத ஒன்று அனைத்துக் கல்வித்துறைகளும் இதில் ஈடுபட்டுள்ளன. ஒரு புது வாழ்வு முறையைக் குறிவைப்பது என்பதே ஆரம்பப்புள்ளி இந்த ஆரம்பப்புள்ளியிலிருந்து அரசியல் பொருளாதார சமூக சக்தி கொண்டோர் மீது நலமான அழுத்தத்தை உருவாக்க முடியும் இயற்கையில் என்பது வன்முறை சுரண்டல் தன்னலம் என்ற எண்ண ஒட்டங்களை உடைக்கும் தினசரி செயற்பாடுகளில் அடங்கியுள்ளது. நம்பிக்கை உள்ளவர்களாக வெளியிலிருந்து அல்ல உள்ளிருந்து உலகைக் காண்கிறோம்.
உலகின் அனைத்து படைப்புக்களோடும் இறைவன் நமக்களித்த பிணைப்பை உணர்ந்து கொள்கிறோம். இறைவன் தந்த நமது தனித்துவத்தை வளர்ப்பதால் இயற்கையில் சார்ந்த மனமாற்றம் பெற்று படைப்பாற்றலில் வளர்வோம் இந்த உலகை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களும் கேடு விளையாத வண்ணம் நமது வாழ்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மனித இனத்தின் அறிவின் முதிர்ச்சியால் தாவரங்கள் பறவைகள் விலங்குகள் இயற்கையின் செல்வமாகிய காடுகள் ஆறுகள் அருவிகள் மலைகள் இவை யாவற்றின் நலன் குறையலாம் நாம் இயற்கையை பாதுகாத்தல் நம்மையும் இயற்கை பாதுகாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்