இன்று(14) இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான கால்பந்தாட்டத்தில் இறுதிப் போட்டி

இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டத்தில் சம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் புதன்கிழமை (14) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

பி குழுவுக்கான லீக் சுற்றில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட போது நேபாளம் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டிருந்தது. அதற்காக இறுதிப் போட்டியிலும்

இந்தியாவை நேபாளம் வீழ்த்தும் என எதிர்பார்க்கமுடியாது.

ஏனெனில் இந்த சுற்றுப் போட்டியில் பல்வாய்ந்தது எனவும் சம்பியன் ஆகக் கூடியதெனவும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷை இந்தியா வெற்றிகொண்டதே இதற்கு காரணம்.

பங்களாதேஷ், மாலைதீவுகள், இலங்கை ஆகிய அணிகள் ஏ குழுவிலும் பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் பி குழுவிலும் மோதின.

லீக் சுற்றில் ஏ குழுவில் பூட்டான் (2 – 1), (இந்தியா (3 – 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்ட நேபாளம் அரை இறுதியில் இலங்கையை 6 க்கு 0 என வெற்றிகொண்டிருந்தது.

இந்தியா தனது குழுவில் பூட்டானை 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது. ஆனால் நேபாளத்திடம் தோல்வி அடைந்தது.

அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை அதிர்ச்சியில் ஆழ்த்தி 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதிபெற்றது.

இந்த சுற்றுப் போட்டியில் நேபாளம் மாத்திரமே தோல்வி அடையாத அணியாக திகழ்கின்றது.

இந்தியா, நேபாளம் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிப்பது இலகுவானதல்ல.

ஆனால், இந்தியாவை முதல் சுற்றில் நேபாளம் வெற்றிகொண்டிருந்ததால் இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்று சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுவதில் தவறில்லை.

இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாக்கூடிய அணி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பலம்வாய்ந்த பங்களாதேஷை அரை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்தியா, முதல் சுற்றில் நேபாளத்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து சம்பியனாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளில் நேபாளம் சற்று பலம்வாய்ந்த அணியாகத் திகழ்கின்றபோதிலும் இன்றைய இறுதிப் போட்டியில் எந்த அணி திறமையாக விளையாடுகின்றதோ அந்த அணியே வெற்றிபெறக்கூடியதாக இருக்கும்.

வன்லால்பெக்கா குவிட்டே இந்திய அணிக்கும் பிரசாந்த் லக்சாம் நேபாள அணிக்கும் தலைவர்களாக விளையாடுகின்றனர். இருவருமே சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்வதாக குறிப்பிட்டனர்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் 15 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டி முதன்முதலில் 2011இல் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர் அந்த வயதுப் பிரிவு மாற்றப்பட்டு 16 வயதுக்குட்பட்ட போட்டியாக நடத்தப்பட்டுவந்தது. இந்த வருடத்திலிருந்து இப் போட்டி 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியாக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்