இன்று ஜனாதிபதி பதவிக்கான தெரிவு! யாருக்கு ஜனாதிபதி பதவி சொந்தமாகும்?

நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறவுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் கிளர்ச்சியால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இப்பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகம்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தாம் அப்பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என்றுகூறி, டலஸ் அழகப்பெரும பெயரை முன்மொழிந்துள்ளார்.

63 வயதாகும் டலஸ் அழகம்பெரும, 2005 முதல் அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மற்றொரு வேட்பாளரான 53 வயதாகும் அநுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்.

பாராளுமன்றத்தில் இதுபோன்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது 1978-க்குப் பிறகு இதுவரை நடந்திராத ஒன்று. 1982, 88, 94, 99 மற்றும் 2005, 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் மக்கள் வாக்களித்தே நாட்டில் ஜனாதிபதி தெரிவு நடந்திருக்கிறது.

1993-இல் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டபோது வெற்றிடமான பதவிக்கு DB Wijetunga நாடாளுமன்றத்தால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இப்போதே பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலமான 2024 நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்