
எதிர்காலத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மேலும் பல ரயில்கள் தடம் புரளும் என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் மார்க்கங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டால் இந்த நிலைமையைத் தவிர்க்க முடியாது என்று அச்சங்கம் கூறியுள்ளது.
ரயில்களுக்கு தேவையான உராய்வு நீக்கிகள், இயந்திரங்கள், பெட்டிகள், உதிரிபாகங்கள் என்பவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே ரயில்கள் தடம்புரள்வதுடன், இயங்கும் பல ரயில்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட சங்கம், ரயில்கள் இல்லை என்று கூறி பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.
ரயில் உதிரி பாகங்கள் இல்லாததால், தற்போது நாளொன்றுக்கு சுமார் 14 ரயில் சேவைகளை திணைக்களம் இரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகில் நேற்று ரயிலொன்று தடம்புரண்டது. காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டது.
டொலர் நெருக்கடி காரணமாக மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.