‘இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது’- டோனிக்கு சாக்‌ஷியின் பிறந்த நாள் வாழ்த்து!

20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்புக்குரியவர், மகேந்திர சிங் டோனி. கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய பிறகு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுகிறார்

. ஆனாலும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாததால் அவரால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கு மத்தியில் டோனி நேற்று தனது 39-வது பிறந்த நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக கொண்டாடினார்.

அவருக்கு சக, முன்னாள் வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ‘டோனி உடல் ஆரோக்கியத்துடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்’ என்று சச்சின் தெண்டுல்கர், இந்திய கேப்டன் கோலி வாழ்த்து கூறியுள்ளனர். டோனியை இளம் வீரர், அதிரடி ஜாம்பவான் என்று வர்ணித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

டோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்தியாசமான வாழ்த்து செய்தியில், ‘மேலும் ஓராண்டு உங்களுக்கு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால் அழகாகவும், இனிமையானவராகவும் மாறிவிட்டீர்கள்.

அனைத்து தரப்பு வாழ்த்துகளாலும், பரிசுகளாலும் உங்களை அசைத்து விட முடியாது. மெழுகுவர்த்தி பற்ற வைத்து, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவோம். வாழ்த்துகள் கணவா!!!’ என்று குறிப்பிட்டுள்ளதோடு டோனி தனது வீட்டில் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதும், குடும்பத்தினருடன் இருப்பதும் போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

முகநூலில் நாம்