இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் பெண்கள் முன்னெடுத்துள்ள பெரும்போராட்டம்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், எதிர்ப்பின் மையமாகிவிட்டது. இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்வதற்கான தகுதியில் இருந்து முஸ்லிம்களை நீக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து, ஸ்கார்ப் அணிந்துள்ள பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எச்சரிக்கைகள், துப்பாக்கிச் சூடுகள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகள், வழக்குப் பதிவுகளுக்குப் பிறகும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் பெண்களின் தன்னெழுச்சியால் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அநேகமாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் பெண்கள் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் சாலைக்கு வந்து போராடுகிறார்கள். எதிர்ப்பில் உறுதியைக் காட்டி, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

மிரட்டல்களையும் மீறி தொடரும் போராட்டம்

டெல்லியில் குறைந்த வருவாய் ஈட்டும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஷாஹீன் பாக் பகுதியைச் சேர்ந்த பெண்கள், இந்த எதிர்ப்பில் உறுதியாக இருந்து ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக கடும் பனியிலும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அவர்கள் கூறும் புதிய சட்டத்துக்கு எதிராக அமைதிவழி போராட்டமாக இரவு பகலாக அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

வேறு பல இடங்களில் காவல் துறையினரின் அட்டூழியங்கள் இங்கும் நிகழலாம் என்ற மிரட்டல்களை மீறி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் காட்டும் உறுதியான நிலைப்பாடு, போராட்டம் என்ற வார்த்தைக்குப் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. முஸ்லிம் பெண்களுக்கான பாரம்பரியமான உடைகளுடன் களமிறங்கியுள்ள அவர்கள் அடையாள அரசியலுக்காக போராடி வருகிறார்கள்.

ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தாக்கப்பட்ட நாளன்று இரவு இது தொடங்கியது. ஷாஹீன் பாக் பகுதியில் பத்து பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து போராட்டத்தில் அமர முடிவு செய்தனர்.

அதே நாள் இரவு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், அப்துல்லா விடுதியில் இருந்த பெண்கள், பூட்டியிருந்த மூன்று பூட்டுகளை உடைத்து வெளியே வந்தனர். விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் ஈவிரக்கமின்றி தாக்கியதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் அமர்ந்தனர். மறுநாள் டிசம்பர் 16 ஆம் தேதி காலை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் விடுதிகள் காலி செய்யப்பட்டன. மாணவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அன்று காலையில் ஆயிஷா மற்றும் டுபா என்ற 20 மற்றும் 21 வயதான இரண்டு பெண்கள் அலிகாரில் தோத்பூர் பகுதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவம் பயிலும் அவர்கள், பல்கலைக்கழகத்துக்குச் சென்று மௌலானா ஆசாத் நூலகத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்தனர். முந்தைய போராட்டத்தில் வைத்திருந்த பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். பதாகையின் பின்புறம் `அமைதிவழிப் போராட்டம்’ என்று டுபா எழுதியிருந்தார். அவர்கள் பல மணி நேரம் அமர்ந்திருந்தனர். தலைமை நிர்வாகி வந்து எச்சரித்த போதிலும், தாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். அலிகாரில் அமல் செய்யப்பட்டுள்ள 144வது பிரிவின்படி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

முஸ்லிம் பெண்களை அரசுக்கு கையாளத் தெரியாது…

`நாங்கள் பணிந்து விட்டோம் என யாரும் நினைத்துவிடக் கூடாது என்று விரும்பினோம். நாங்கள் அமைதியாக இருந்தோம். போராட்டத்தில் ஒரு மாணவர் நின்றிருந்தாலும், போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதாக அர்த்தம்” என்று டுபா கூறினார்.

இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர். பெண்கள்தான் போராட்டத்தை உயிர்ப்புடன் வைக்க முடியும். ஏனெனில், குரல் எழுப்ப முடியாதவர்கள் என்று கூறப்பட்டு வரும், நீண்ட நெடிய காலமாக அடக்கப்பட்டு வரும் பிரிவினராக உள்ள முஸ்லிம் பெண்களை எப்படி கையாள்வது என்று அரசுக்கு தெரியாது என்கின்றனர்.

முதன்முறையாக பெண்களாகவே திரண்டு, பெரிய அளவில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது 2012ல் பாலியல் வல்லுறவுக்கு எதிரான போராட்டங்களின் போதுதான் நடந்தது.

ஆனால், முஸ்லிம் பெண்களைப் பொருத்தவரை 2002ல் கோத்ரா கலவரத்தின் போதே இதுபோன்ற போராட்டம் தொடங்கிவிட்டது. அந்தப் படுகொலைகளைக் கண்டித்து நிறைய பெண்கள் போராட்டத்துக்கு வந்தனர் என்றும், சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இயக்கவாதியும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஷபனம் ஹாஷ்மி கூறுகிறார். உடலையும், தலையையும் மூடியுள்ள இஸ்லாமிய பெண்களின் கலாச்சார உடையில், தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்வதற்கு பயப்படாத அல்லது வெட்கப்படாதவர்களாக தங்கள் அடையாளத்திற்கான உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.

தலையை மூடி துணி அணிவது என்பது தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலானது தானே தவிர, மதத்தால் திணிக்கப்பட்டது இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தலையை மூடி துணி அணிந்துள்ள பெண்கள் பதாகைகளை ஏந்தி, காவல் துறையினரை துணிச்சலுடன் எதிர்கொள்வதை புகைப்படங்கள் காட்டுகின்றன. கடுமையான பனி உள்ள நிலையிலும், காவல் துறையினரின் கொடூரங்கள் பற்றி செய்திகளை அறிந்த நிலையிலும், இரவு பகலாக போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

`இது முன் எப்போதும் இல்லாதது. சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்துக்கு வந்திருப்பதை நான் என் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்தது இல்லை. ஒரு அணையை உடைந்துவிட்டதைப் போன்றது இது. 25 வயதுக்கு உள்பட்டவர்களின் புரட்சியாக இது உள்ளது. சமூக ஊடகத்தின் வலிமையை அறிந்தவர்கள் அவர்கள். ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக இது உள்ளது” என்று ஹாஷ்மி கூறினார்.

பிரதமர் மோதியை புறக்கணிக்கும் முஸ்லிம் பெண்கள்

நாட்டின் தலைநகர் டெல்லியில் டிசம்பர் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவில்லை. ஆனால், வெளியே சாலைகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெருமளவில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


சுதந்திரமான பெண்கள் முன்முயற்சி என்ற உண்மை கண்டறியும் குழுவினர், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் பெண்களின் வாக்குமூலங்களை சேகரித்து, அச்சப்படாதவர்கள் என்ற தலைப்பில் அவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். இளம் பெண்கள் சாலைகளுக்கு வந்து போராட்டத்தைத் தொடங்கிய நாளில், சமூக அரசியல் அதிகாரங்கள் மறுக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

`அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 2019 டிசம்பர் 15 ஆம் தேதி மாணவர்களுக்கு எதிராக மோசமான, கொடூர தாக்குதல்கள் நடைபெற்றன. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக, அந்த மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இப்போது லட்சக்கணக்கான பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞர்களை நாடு முழுக்க திரட்டிவிட்டது.

ஜாமியா மிலியா போராட்டத்தில் முன்வரிசையில் நின்று உண்மை, நீதி மற்றும் சமத்துவத்துக்காக குரல் கொடுப்பது, இந்தியாவின் இளம்பெண்கள். அவர்களுடைய புகைப்படங்கள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் 19 முதல் 31 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள். ஆனால் அவர்களில் சிலர் அருகாமைப் பகுதிகளைச் சேர்ந்த இல்லத்தரசிகள். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து, போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 2018-19ல் தலைவராக இருந்தவரும், ஜே.என்.யூ.வில் இப்போது கவுன்சிலராக இருப்பவருமான இளம்பெண் அப்ரீன் பாத்திமா போன்றவர்கள், முத்தலாக் தடை சட்டம், பாபர் மசூதி தீர்ப்பு நிகழ்வுகளின் போதே எதிர்ப்பு உணர்வு உருவாகிவிட்டது என்று கூறுகின்றனர்.

`உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்ற போது நேரடி அச்சுறுத்தலாக நான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்களை கல்லறைகளில் இருந்து தோண்டி எடுத்து கற்பழிப்போம் என்பது போன்ற வெறுப்பு பேச்சுகள் இருந்தன. சகித்துக் கொள்ளும் வரம்பைக் கடந்துவிட்டதால் முஸ்லிம் பெண்கள் வெளியில் வருகிறார்கள்” என்று அவர் கூறினார். “அச்சம் இருந்தாலும், போராடாமல் இருந்துவிட முடியாது. அவர்களைப் பார்த்து நாங்கள் பயப்படுகிறோம் என்று அவர்கள் நினைத்துவிடக் கூடாது” என்றார் அவர்.

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக, அந்த சமுதாய மக்கள் வெளியில் வந்திருக்கிறார்கள் என்று 21 வயதான அவர் கூறுகிறார்.

“முஸ்லிம் ஆண்களை எப்படி கையாள்வது என்று அரசுக்குத் தெரியும். ஆனால் முஸ்லிம் பெண்களை அரசு இன்னும் பார்த்தது கிடையாது. எங்களுடன் எப்படி மோதுவது என அரசுக்குத் தெரியாது. நாங்கள் போராட்டத்துக்கு வருவோம் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல் துறையினரின் கொடூரமான தாக்குதல்கள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த, உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா. அவருடைய தாயார் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர். ஆனால் தன் மூன்று மகள்களும் பள்ளிக்கூடம் செல்வதை உறுதி செய்தார். தன் குடும்பத்தில் கல்வி கற்கும் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவராக தாம் உள்ளதாக பாத்திமா தெரிவித்தார்.

“நான் பாட்டிகள், அம்மாக்கள் கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்தவள் கிடையாது” என்று அவர் கூறினார். “ஆனால் இதை சம அளவிலான போராக நாங்கள் கருதுகிறோம். நீண்ட காலமாக நாங்கள் அமைதியாக இருந்துவிட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

தலைக்கு துணி அணியுமாறு பாத்திமாவிடம் அவரது குடும்பத்தினர் ஒருபோதும் கூறியதில்லை. டப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தலைப்புச் செய்திகள் வெளியான 2019 வரையில் அவர் தலையில் துணி அணிந்தது இல்லை.

`முஸ்லிம் பெண்களுக்கு கருத்து கிடையாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை. முஸ்லிம்களின் அடையாளபூர்வ பிரதிநிதிநியாக இருக்க நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

முகமது சஜ்ஜாத், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பிக்கிறார்.

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.-க்கு எதிராக ஜாமியா மற்றும் அலிகார் வளாகங்களில் பெரும்பாலும் முஸ்லிம் பெண்களால் முன்னெடுத்து நடத்தப்படும் இந்தப் போராட்டம், திட்டமிட்டு நடத்தப்படும் மற்ற போராட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சஜ்ஜாத் கூறினார்.

“முஸ்லிம் பெண்கள் குடியுரிமை விஷயத்துக்காகப் போராடுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது. தங்கள் அடையாளங்களுடன் அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் உள்ளனர். தெளிவாக, உறுதியாக கருத்துகளைக் கூறுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

நவீன கல்வி, சமூக ஊடகம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக, முஸ்லிம் பெண்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் 30 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். முதுகலை படிப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர்.

பெண்கள் திருமணமாகும் போது, பெயரின் பிற்பாதி மாறிவிடும் அல்லது குடிபெயர்ந்து வந்த குடும்பத்து ஆணை மணக்கும் போது மாறும். அதனால் ஆவணங்களைக் காட்டுவது தங்களுக்குப் பிரச்சினையாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில், பெண்களின் பங்கு முக்கியமானது.

`அரசின் தார்மிக அழுத்தத்தை பெண்கள் எதிர்க்கின்றனர். காவல் துறையினரின் அட்டூழியங்களை எதிர்ப்பது என்பது இந்த அணுகுமுறையின் ஓர் அம்சமாக உள்ளது” என்று சஜ்ஜாத் குறிப்பிடுகிறார்.

முகநூலில் நாம்