இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி முதல் பழங்குடியின பெண்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.

திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.

முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.

வெற்றிப் பெற்ற திரெளபதி முர்மூவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“திரெளபதி முர்மூவிற்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிகளுக்கு நன்றி. திரெளபதி முர்மூவின் மகத்தான வெற்றி நமது ஜனநாயகத்தின் நல்ல வெளிப்பாடு” என மோதி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் திரெளபதி முர்மூவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் திரெளபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக , எந்தவித அச்சமும் பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராக முர்மூ செயல்படுவார் என தான் நம்புவதாக யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரெளபதி முர்மூவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வரும் முர்மூ, அரசியலைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஒடுக்கப்பட்ட குரல்களின் பக்கம் நிற்பார் என தான் நம்புவதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திரெளபதி முர்மூ 540 எம் பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார். அதன் மதிப்பு 3 லட்சத்து 78 ஆயிரம். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களின் வாக்குகளை பெற்றிருந்தார் அதன் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 600.

இரண்டாம் சுற்றில் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டன (எழுத்து வரிசையில்). அதில் 1138 வாக்குகள் செல்லும் வாக்குகளாக இருந்தன. அதன் மதிப்பு ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 575 ஆகும். இதில் திரெளபதி முர்மூ 809 வாக்குகளை பெற்றிருந்தார். எனவே அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 299 ஆகும்.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 329 வாக்குகளை பெற்றார். அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 44 ஆயிரத்து 276 ஆகும்.

மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரெளபதி முர்மூ 812 வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 521 வாக்குகளை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்