
இந்தியா-விழுப்புரம் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாடசாலை வளாகத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விழுப்புரம் மாவட்ட பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது எனவும், இந்த முகாமில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முகாம்களில் வசிக்கும் பிள்ளைகள் முகாமிற்கு அருகே உள்ள முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கின்ற 8வயது சிறுமி ஒருவர் கடந்த சனிக்கிழமை பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அதே முகாமை சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்ற சிறுமி சோர்வுடனும், உடல் முடியாமலும் இருப்பதை கண்ட பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததை தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் .
இதனையடுத்து சிறுமியை புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இதனால் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இருவரையும், கோட்டக்குப்பம் மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, கைதும் செய்யதுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாவட்டம் இளஞ்சிறார் நீதிக் குழும நிதிபதிகள் முன்பு முன்னிலைப்படுத்தி, கடலூர் மாவட்டம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி புதுச்சேரி அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார் எனவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.