
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஆங்காங்கே மழைநீர் மற்றும் சேர் நிறைந்த ஆடுகளத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் இந்தியா 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.

மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்ததால் பந்துபரிமாற்றங்கள் முறையாக அமையவில்லை. இதன் காரணமாக இரண்டு அணிகளும் சிரமங்களை எதிர்கொண்டன.

எனினும் போட்டியின் ??ஆவது நிமிடத்தில் ரிக்கி மீட்டேய் ஹாஓபாம் வலப்புறத்திலிருந்து பரிமாறிய பந்தை மிக இலாவகமாக தங்லால்சூன் கங்டே கோலாக்கி இந்தியாவை முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்தில் கோரு சிங் திங்குஜம் வலப்புறத்திலிருந்து மிக நேர்த்தியாக பரிமாறிய பந்தை தலையால் முட்டி கங்டே தனது 2ஆவது கோலை புகுத்தினார்.
இடைவேளையின்போது இந்தியா 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னியில் இருந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 47ஆவது நிமிடத்தில் பூட்டான் கோல் எல்லையில் இருந்து எகிறிவந்த பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த இந்திய அணித் தலைவர் வன்லான்பெக்கா குவிட்டே பலமாக உதைத்து தனது அணியின் 3ஆவது கோலைப் போட்டார்.அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் மாறிமாறி கோல் போடுவதற்கு முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் பலன் தரவில்லை. போட்டியின் கடைசிக் கட்டத்தில் பூட்டான் வீரர்கள் இந்திய எல்லையில் ஆதிக்கம் செலுத்திய வண்ணம் இருந்தனர். அவர்கள் கோலை நோக்கி உதைத்த பந்துகளை இந்திய கோல்காப்பாளர் சஹில் மிக இலகுவாக தடுத்து நிறுத்தினார்.
இறுதியில் இந்தியா 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.