
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்திலேயே லோகேஷ் ராகுலை மகேஷ் தீக்ஷனவிடம் இழந்தது. அடுத்த ஓவரிலேயே விராட் கோலியையும் டில்ஷான் மதுஷங்கவிடம் இந்தியா இழந்தது.
இந்நிலையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, 72 (41) ஓட்டங்களுடன் சாமிக கருணாரத்னவிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து சூரியகுமார் யாதவ்வும் 34 (29) ஓட்டங்களுடன் ஷானகவிடம் வீழ்ந்தார்.
சிறிது நேரத்தில் ஹர்டிக் பாண்டியாவும் ஷானகவிடம் வீழ்ந்ததோடு, தீபக் ஹூடா, றிஷப் பண்ட் ஆகியோர் மதுஷங்கவிடம் அடுத்த ஓவரில் வீழ்ந்தனர். இறுதி ஓவரில் புவ்னேஷ்வர் குமாரும் கருணாரத்னவிடம் வீழ்ந்த நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வினின் ஆட்டமிழக்காத 15 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்க, குசல் மென்டிஸ் மூலம் சிறப்பான் ஆரம்பத்தைப் பெற்றது.
இந்நிலையில், 52 (37) ஓட்டங்களுடன் யுஸ்வேந்திர சஹாலிடம் நிஸங்க வீழ்ந்ததுடன், அதே ஓவரில் சரித் அஸலங்கவும் வந்த வேகத்தில் பவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த தனுஷ்க குணதிலக, இரவிச்சந்திரன் அஷ்வினிடம் வீழ்ந்ததோடு, உடனேயே மென்டிஸும் 57 (37) ஓட்டங்களுடன் சஹலிடம் வீழ்ந்திருந்தார்.
எனினும், அணித்தலைவர் ஷானகவின் ஆட்டமிழக்காத 33 (18), பானுக ராஜபக்ஷவின் ஆட்டமிழக்காத 25 (17) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலங்கை வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஷானக தெரிவானார்.