
இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசக் கூடிய தலைவர் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஒரு தலைவர் என்பவர் எந்தவொரு விஷயத்திலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கோலாலம்பூரில் உள்ள அனைத்துலக இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மகாதீர் இந்தியாவை விமர்சித்ததை சுட்டிக்காட்டியே இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்தார்.
“பிரதமர் மகாதீர் இஸ்லாமிய சமூகத்தின் உண்மையான தலைவர். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் மேம்பாடு என்று வரும்போது அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்.”
“ஒரு தலைவர் என்பவர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதனால்தான் பிரதமர் மகாதீரை வெகுவாக நேசிக்கிறோம், மதிக்கிறோம்,” என்றார் இம்ரான் கான்.”
“ஒரு தலைவருக்கும், அலுவலக நிர்வாகிக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு தலைவருக்கு ஒரு சித்தாந்தத்திலும், ஓர் அமைப்பிலும் எப்போதும் நம்பிக்கை இருக்கும்,” என்றார் இம்ரான்கான்.
காஷ்மீர் விவகாரம், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை தொடர்பாக இந்தியாவை விமர்சித்த காரணத்தால், மலேசியப் பாமாயில் இறக்குமதி அளவை இந்திய அரசு குறைத்துவிட்டதாக கூறப்படுவது குறித்து இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“1.3 பில்லியன் இஸ்லாமியர்களும் காஷ்மீருக்காகக் குரல் கொடுக்க வேண்டும்”
உலகெங்கிலும் உள்ள 1.3 பில்லியன் இஸ்லாமியர்கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய இம்ரான் கான், குறிப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“என்னைப் பொறுத்தவரை காஷ்மீரில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும். தீவிர தேசியவாதத்தின் அடிப்படையில் பிற சமூகங்களின் மீது வெறுப்பு காட்டுகிறீர்கள் எனில், அது ரத்தம் சிந்துவதற்கும், ரத்தக் களறிக்கும்தான் வித்திடும். வரலாற்றைப் படித்துப் பார்த்தீர்கள் எனில் இது புரியும்.

“எங்கள் பிராந்தியத்தின் அபிவிருத்தியிலும், வறுமை ஒழிப்பிலும் நம்பிக்கை கொண்டுள்ள இந்தியாவுடன் சமரசமாகச் செல்ல பாகிஸ்தான் எப்போதுமே தயாராக உள்ளது.”
“இந்திய துணைக் கண்டத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏழ்மையில் உள்ளனர். இப்பகுதியில் வறுமையைக் குறைக்க வேண்டும் எனில் பாகிஸ்தானும் இந்தியாவும் நல்லறவு பேணுவதே சிறந்த வழி. பதற்றம் குறைந்து, பாதுகாப்புக்கென குறைவாக செலவிடும்போதுதான் அதிக செழிப்பும் உண்டாகும்,” என்றார் இம்ரான் கான்.
எனினும் பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவிடம் இது தொடர்பாக ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.