இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம்  முதலிடம் 

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6 ஆவது முறையாக இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

இதற்கான விருதினை வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இணையவழியில் வழங்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அதனை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: இந்தியாவிலேயே தமிழ்நாடு சுகாதாரத் துறை பல்வேறு அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த வரிசையில் டபுள் ஹாட்ரிக் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து 6ஆவது முறையாக உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாடு மத்திய அரசின் விருதினைப் பெறுகிறது.

இதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,242 உடல் உறுப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் தானமாகப் பெறப்பட்டு பதிவு முன்னுரிமை அடிப்படையில் அவை தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த கரோனா பரவல் காலத்திலும் கூட, 107 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும், 183 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும், 6 பேருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டியுள்ளார்.

துயரமான அந்த நேரத்திலும் உடல் உறுப்பு தானம் வழங்க வேண்டும் என முன்வந்த இறந்தவர்களின் உறவினர்களுக்கு விருதினை காணிக்கையாக்க விரும்புகிறேன்.

அதேபோல, கொடையாளர் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான முன்மொழிவுகளும் அரசிடம் உள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கக் கோரியுள்ளோம்.

மேலும், உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்லும் ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றார் விஜயபாஸ்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்