
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
இந்தோனீஷியா தலைநகர் ஜகார்தாவில் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரீஸ்வரன், கார்த்திக் ஆகிய இருவர் பங்கேற்றுள்ளனர். நடப்புச் சாம்பியனான இந்தியா சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது.
இதில், 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றின் முடிவில் மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் மலேசியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், ஜப்பானை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தோனீசியா அணியை 16-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.