யுஆன் வாங் 5: நாடு எங்கே?

நிலாந்தன்

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் பதினாறாம் திகதி இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படும் இலங்கைத்தீவின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு, சீனாவின் “யுஆன் வாங் 5” என்ற கப்பல் வருகிறது.

இதை, இலங்கை தீவின் மீதான இந்திய ராஜதந்திரத்தின் ஆகப் பிந்திய ஒரு பின்னடைவாக எடுத்துக் கொள்ளலாமா?

கப்பலின் வருகை ஏற்கனவே இரண்டு அரசுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனினும் இந்திய ஊடகங்கள் அந்தக் கப்பலின் வருகையைக் குறித்து பதட்டமான செய்திகளை வெளியிட்டன. இது விடயத்தில் இந்திய வெளியுறவுத் துறையை விடவும் இந்திய ஊடகங்கள் அதிகம் பதட்டமடைவதாகத் தெரிகிறது

கிடைக்கப்பெறும் தகவல்களின்படி அந்தக் கப்பலானது ஆராய்ச்சி கண்காணிப்புக் கப்பல் என்று கூறப்பட்ட போதிலும், அது அதைவிட ஆழமான ராணுவ பரிமாணத்தைக் கொண்டது என்று கூறப்படுகிறது. அக்கப்பலில் கடலின் ஆழத்துள் காணப்படும் நீர் மூழ்கி வழித்தடங்களை ஆராயும் சக்தி மிக்க உபகரணங்கள் அதில் பொருத்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதுதான் இந்தியாவின் அதிக கரிசனைக்கு காரணமாக இருக்கலாம்.

அதே சமயம் சீனா அண்மையில் ஒரு செய்மதியை விண்வெளியில் செலுத்தியது. அந்தச் செய்மதி ஏவப்பட்ட பின்னரான தொழில்நுட்பத் தேவைகளுக்கு கப்பல் இந்தப் பிராந்திய கடலில் தரித்து நிற்க வேண்டிய தேவை இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படித்தான் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள பாகிஸ்தான் கப்பல் தொடர்பிலும் கூறப்படுகிறது. அண்மையில் பாகிஸ்தானும் ஒரு செய்மதியை விண்வெளியில் செலுத்தியது.

இக்கப்பல்களின் வருகை ஏற்கனவே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின்படி நடக்கின்றன. ஆனால் அவை வருகைதந்த காலம்தான் அவை குறித்த பதட்டமான செய்திகளுக்குக் காரணம்.

கடந்த ஆறு மாத காலமாக இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியில் முதலில் உதவிய நாடாகவும் அதிகம் உதவிய நாடாகவும் இந்தியா காணப்படுகிறது. கிட்டதட்ட நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்தியா உதவியுள்ளது. இந்தியாவின் உதவி இல்லையென்றால் ரணில் விக்ரமசிங்க இப்பொழுது ஏற்படுத்தியிருக்கும் பெரும்பாலான மாற்றங்களை செய்திருக்கவே முடியாது. அதனால்தான் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், அந்த உதவியை உயிர் மூச்சு என்று வர்ணித்திருந்தார்.

இந்த உதவிகள் மூலம் இந்தியா கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் ஆறு உடன்படிக்கைகளை எழுதியிருக்கிறது. இந்த உடன்படிக்கைகளில் இரண்டு மிகவும் முக்கியமானவை. ஒன்று மன்னாரிலும் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலும் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை நிர்மாணிப்பது. இதில் தீவுப் பகுதியில் அத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு முதலில் சீனா முன் வந்தது. இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு அனுமதியும் வழங்கியது. ஆனால் இப்பொழுது இந்தியா அந்தத் திட்டங்களை தன்வசபடுத்திக் கொண்டுவிட்டது. இரண்டாவது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் ஓர் உடன்படிக்கை. அதாவது கடலில் விபத்துக்கள் ஏற்படும் போது கப்பல்களை மீட்பதற்கான ஒரு கண்காணிப்பு வலைப் பின்னலை உருவாக்கும் உடன்படிக்கை. அது இப்பிராந்தியக் கடலை தொடர்ச்சியாக தனது தொழில்நுட்ப கண்காணிப்புக்குள் வைத்திருப்பதற்கு இந்தியாவுக்கு உதவும்.

இவ்வாறான உடன்படிக்கைகளின் மூலம் இந்தியா தனது பிராந்திய கடலில் தனது கண்காணிப்பு மேலாண்மையை ஒப்பிட்டளவில் அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பொருள் பிராந்தியக் கடலில் ஏற்கனவே நிலைகொண்டுள்ள சீனாவை அகற்றிவிடலாம் என்பதல்ல.

அம்பாந்தோட்டையில் இருந்து சீனாவை அகற்றுவது என்று சொன்னால் குறைந்தது 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். துறைமுக நகரத்தில் இருந்தும் சீனா அவ்வளவு சுலபமாக விலகிச் செல்லாது. திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் அனுகூலங்களை நன்கு பயன்படுத்தி இலங்கைத்தீவின் மீது தனது செல்வாக்கை நிரந்தரமாகப் பலப்படுத்தும் உடன்படிக்கைகளை சீனா செய்து கொண்டு விட்டது. அவற்றை முறிப்பது என்று சொன்னால் அது ராஜ்ய வழமைக்கு முரணானது. இக்கப்பலின் விவகாரமும் அப்படித்தான்.

கப்பலின் வருகை தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முறித்துக்கொண்டு இலங்கை திடீரென்று கப்பலை வரவேண்டாம் என்று கேட்க முடியாது. அதிலும் குறிப்பாக, சீனாவுடனான கடனை மீளக் கட்டமைப்பதற்கு சீனாவின் தயவை நாடி நிற்கும் இலங்கைக்கு இதுதொடர்பில் சீனாவுடன் முரண்படுவதில் வரையறைகள் உண்டு. அதனால்தான் இலங்கை அரசாங்கம் கப்பல் வரும் திகதியை பின்போடுமாறு கேட்டது.

ஆனால் அதற்கு சீனா வழங்கிய பதில் பெருமளவுக்கு இந்தியாவின் மீது விமர்சனங்களை தெரிவிப்பதாகக் காணப்படுகிறது. சீனா கூறுகிறது, இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்று. எனவே அது சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் என்று. சீனாவின் இந்த விளக்கம் தீபெத்துக்குப் பொருந்துமா? தாய்வானுக்குப் பொருந்துமா? சீனாவின் உய்குர் மக்களுக்குப் பொருந்துமா?

கடந்த ஆறுமாத காலமாக இலங்கைக்கு உதவிய காரணத்தால் இலங்கை மீது தனது செல்வாக்கு முன்னரை விட அதிகரித்திருப்பதாக இந்தியா கருதக்கூடும். எனவே சீனக்கப்பல் விவகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய புதிய பேர பலத்தை பரிசோதிக்க இந்தியா விரும்பியதா? ஆனால் அதைத்தான் சீனாவும் செய்யும். ஏனெனில் இலங்கைத் தீவில் சீனாவின் முதலீடுகள் அரசியல் முதலீடுகள்தான். ராணுவ முதலீடுகள்தான். தூய பொருளாதார முதலீடுகள் அல்ல.

இப்பொழுது ஐ.எம்.எஃப் சீனாவுடனான கடனை மீளக் கட்டமைக்குமாறு கேட்கிறது. ஆனால் சீனா அதற்கு இதுவரையிலும் பதில் கூறவில்லை. அதேசமயம் ஆபிரிக்க நாடான சாம்பியாவுடன் அவ்வாறு கடனை மீள கட்டமைப்பதற்கு சீனா கடந்த மாத இறுதியில் ஒப்புக்கொண்டுவிட்டது. சாம்பியாவின் பிராந்திய யதார்த்தமும் இலங்கைத்தீவின் பிராந்திய யதார்த்தமும் ஒன்று அல்ல. இலங்கைத்தீவு இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக காணப்பட்ட சிங்கள மற்றும் தமிழ்த் தரப்புகளை இந்தியா எதுவிதத்திலாவது தோற்கடித்திருக்கிறது. எனினும், இனப்பிரச்சினைமூலம் திறக்கப்பட்ட வழிகளின் ஊடாக சீனா இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காலூன்றி விட்டது. அது இப்பிராந்திய யதார்த்தத்திற்கு முரணானது. அது எப்படி சாத்தியமானது?

தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் அது சாத்தியமானது. தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லாத காரணத்தால்தான் அது சாத்தியமானது. ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிசல்களை வெற்றிகரமாக கையாண்டு கொழும்பில் இருந்த அரசாங்கங்கள் சீனாவைத் தீவுக்குள் கொண்டு வந்துவிட்டன. அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையும் கொழும்புக் கடலில் கட்டப்பட்டுவரும் சீன துறைமுகப்பட்டினமும் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துள் சீனா நுழைந்து விட்டதை நிரூபிக்கும் தூலமான உதாரணங்கள் ஆகும்.

அதேசமயம், கடந்த ஆறுமாத காலமாக இலங்கைத்தீவு இந்தியாவின் உதவிகளில் பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. அது காரணமாகத்தான் இந்தியா ஆறு உடன்படிக்கைகளை செய்ய முடிந்தது. ஆனாலும் தமிழ்மக்கள் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகள் பொறுத்து இந்தியா இப்பொழுதும் இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் பலமான நிலையில் இல்லை. உதாரணமாக பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே ஒரு பயணிகள் படகுச் சேவையை தொடங்குவது, தலைமன்னாரில் இருந்து மற்றொரு படகுச் சேவையைத் தொடங்குவது….போன்ற விடயங்களில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய முன்னேற்றங்களைக் காண முடியவில்லை.

பலாலியில் இருந்து விமானம் புறப்படுவதும், காங்கேசன்துறையில் இருந்து கப்பல் புறப்படுவதும், திருநாளைப் போவாரின் கதைகளாகத்தான் காணப்படுகின்றன.

மேலும் யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி உதவியோடு கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை இன்றுவரை திறக்க முடியவில்லை. அது சில மாதங்களுக்கு முன்பு அதாவது இந்தியா இலங்கையோடு ஆறு உடன்படிக்கைகளை கையெழுத்திட்ட அன்று சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு “சொஃப்ட் ஓப்னிங்” என்று பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவார் என்றும் அப்பொழுது அது விமரிசையாகத் திறந்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் அந்தக் கட்டடம் திறக்கப்படவேயில்லை. யாழ்ப்பாணத்தின் மிக உயரமான ஒரு கட்டடமாகவும் தமிழ்மக்களின் அரசியலில் இந்தியாவின் செல்வாக்குக்குள்ள வரையறைகளை உணர்த்தும் ஒரு கட்டடமாகவும் அது தொடர்ந்தும் காணப்படுகிறதா?

இவ்வாறான ஆகப்பிந்திய வளர்ச்சிகளின் பின்னணியில், தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா பலமாக காலூன்றி விட்டதை இந்தியா தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரஷ்யா அவ்வாறு சகித்துக் கொள்ளவில்லை. அதனால்தான் உக்ரைனில் ரசியா ஒரு குரூரமான யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. உக்ரைனில் நடப்பது நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு நிழல் யுத்தமே.

ஆனால் இலங்கை தீவில் அப்படி ஒரு கடும் தெரிவை எடுக்கும் நிலையில் அமெரிக்காவும் இல்லை, இந்தியாவும் இல்லை. அதுமட்டுமல்ல, அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ தமிழ் மக்களைத் தமது பக்கம் வென்றெடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் எந்த ஒரு வெளிச்சக்தியும் சீனாவுக்கு எதிராக உள்ளிறங்கலாம்.

ஏற்கனவே ஒரு தடவை இந்தியா, மூன்று தசாபதங்களுக்கு முன்பு அவ்வாறு உள்ளிறங்கியது. அது தன் படைகளை இறக்கியது. அப்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அப் பனிப்போரை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நிஜப்போர் ஆக முன்னெடுத்தார்கள். அமெரிக்கா கொழும்பிலிருந்த அரசாங்கத்தை ஆதரித்தது. இந்தியா தமிழ்போராளிகளை ஆதரித்தது. தமிழகத்தைப் பின் தளமாகத் திறந்துவிட்டது. முடிவில் ஈழப் போரை பயன்படுத்தி இந்தியா இலங்கைத்தீவின் மீதான தனது மேலாண்மையை பேணத்தக்க ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டது. அதன் விளைவின் விளைவுகள் இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தின. ஆனால் அந்த உடன்படிக்கை இப்பொழுது ஏறக்குறைய காலாவதியாகி விட்டதா என்று கேட்கும் அளவுக்கு சீனா இச்சிறிய தீவினுள் காலூன்றி விட்டது.

அதே சமயம் தமிழ் மக்களை ஒரு கருவியாக கையாண்டு தன்னுடைய பிராந்திய நலன்களை நிறைவேற்ற முயன்ற இந்தியா தமிழ் மக்கள் சிங்கள மக்கள் ஆகிய இரண்டு தரப்புக்கும் நண்பனாக இருக்க முயன்று, முடிவில் இரண்டு தரப்பையுமே கையாள்வது கடினமாகி விட்டது. அதன் விளைவுதான் இலங்கை தீவில் சீனாவின் பிரசன்னம் ஆகும்.

பிராந்திய யதார்தத்துக்கு முரணாகவும், இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்கு எதிராகவும், இலங்கைத்தீவில் சீனா காலூன்றி விட்டது. இவ்வாறு இலங்கைத்தீவில் ஏற்கனவே காலூன்றியிருக்கும் சீனாவின் பேரபலத்தை பரிசோதிக்கும் ஆகப்பிந்திய ஒரு விடயமாக யுஆன் வாங் 5 கப்பல் விவகாரம் காணப்படுகிறது.

இந்தியாவோ அமெரிக்காவோ விரும்பினாலும்கூட இலங்கைத்தீவிலிருந்து சீனா அகற்றப்பட முடியாத ஒரு சக்தியாக தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கும் என்பதே இப்போதுள்ள பிராந்திய யதார்த்தம் ஆகும். பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வேண்டுமானால் அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் பங்கிற்கு இலங்கைத் தீவின் ஏதாவது ஒரு பாகத்தில் பலமாகக் கால் ஊன்றலாம். அதாவது சீனாவிடம் ஒரு பகுதி, இந்தியாவிடம் ஒரு பகுதி, அமெரிக்காவிடம் ஒரு பகுதி, மொத்தத்தில் இக்குட்டித் தீவு பேரரசுகள் பங்கிடும் அப்பம். இதில் மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்த நாடு எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்