
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காக்ராபர் அணு மின் நிலையம் முற்றிலும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்பத்தித் திறனை எட்டியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘எக்ஸ்’ வலைதள (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘இந்தியா மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. முதல் உள்நாட்டு அணு மின் உலையான 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3ஆவது அலகு முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. அதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு பாராட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காக்ராபரில் அணு மின்நிலையத்தில் உள்ள 3 ஆம் பிரிவு அணு உலை, கடந்த ஜூன் 30-ஆம் திகதி வணிக ரீதியிலான மின் உற்பத்தியை ஆரம்பித்தது. தற்போது 90 சதவீத உற்பத்தித் திறனுடன் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தாராப்பூர் (மஹாராஷ்டிரா), ராவட்பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்தரப் பிரதேசம்), கக்ரபார் (குஜராத்), கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா) முதலான இடங்களில் அணுமின் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த அணு மின் நிலையங்களில் இருந்து மொத்தமாக 7,480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 2031 ஆம் ஆண்டில் 22,480 மெகாவாட் ஆக அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.