இந்தியாவின் அழுத்தத்தால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முயற்சி – சரத் வீரசேகர

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை
முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
முயற்சிக்கிறார். பிரபாகரன் ஆயுதமேந்திய நோக்கத்தை பேனாவினால் வழங்க
ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம்
எடின மகாசங்கத்தினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தமாக
அறிவுறுத்தியுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தத்தை
நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத
பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என மகாசங்கத்தினர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மதிப்பளித்து செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம். நாட்டுக்கு எதிரான
செயற்பாடுகள் தலைதூக்கும் போது மகாசங்கத்தினர் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை
வழங்க முன்னிலை வகிப்பது மதிக்கத்தக்கது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு
அமுல்படுத்தப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க அப்போதைய
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அரசியலமைப்பு திருத்தம் ஊடாக ஒருசில பாதுகாப்பு
வழிமுறைகளை ஏற்படுத்தினார். அந்த பாதுகாப்பு வழிமுறையை ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் இந்தியாவின் கடும்
அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். பிரபாகரன் ஆயுதமேந்திய நோக்கத்தை
பேனாவினால் ஒப்படைக்க முடியாது.

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது மக்கள்
விடுதலை முன்னணியினர் நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தியாவில்
இருந்து இறக்குமதி செய்யப்படும் சீலை உள்ளிட்ட ஆடைகளை இலங்கையர்கள் அணிய
கூடாது என கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால் அவர்கள் தற்போது 13 ஆவது
திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடுகிறார்கள். மக்கள் விடுதலை
முன்னணியின் காட்டிக் கொடுப்பு செயற்பாட்டை நாட்டு மக்கள் விளங்கிக்
கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்