இது சிங்கள- தமிழ்ப் பிரச்சினை மட்டும்தானா?


✨இந்த நிலையில் கூட, வரலாற்றிலிருந்து பாடம் படிக்க நாம் தயாரில்லையா?
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் கதைகள் மீண்டும் மேலெழுந்துள்ளன.
அரசாங்கமும் தமிழர் தரப்பும் கூடிப் பேசியுள்ளன. நாடாளுமன்றத்தில் அனல் பறக்கப் பேசுகின்றனர். அலுப்பூட்டும் விவாதங்கள் சலிப்பைத்தான் தருகின்றன.
மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி யோசிக்கலாம் என்ற மைத்திரியின் கருத்தை, ரணில் ஆதரித்துப் பேசியிருக்கிறார். 40 வருடங்களுக்கு முன்பு, அவரது மாமா ஜே.ஆர்.ஜயவர்த்தன முன்வைத்த அதே தீர்வு. இப்படி காலத்தால் பின்னோக்கிச் செல்வதை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
“நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தாயார்” என லக்ஷ்மன் கிரியெல்ல சொல்லியிருக்கிறார். கண்டிச் சிங்களவர்கள் தனியான சமஷ்டி கேட்ட – அதிகாரத்தில் பங்கு கேட்ட வரலாற்றையும் நினைவூட்டியுள்ளார்.

“நீங்கள் நினைத்தால் இதை எப்போதோ தீர்த்திருக்கலாம்” என்று மஹிந்தவை நோக்கி விரல் நீட்டி, “உங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு, எப்போதும் போல “13+ இற்கு ஆதரவு” என்று மஹிந்த கதை விடுகிறார்.
சந்திரிக்கா காலத்தில் மிகச் சிறந்த அரசியலமைப்பு வரைபொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 
இந்தத் துறைசார் வல்லுனர் நீலன் திருச்செல்வம்முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும்  போன்றோரின் முழு உழைப்பினூடாக வெளிவந்த வரைவு அது.இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மிகச் சிறந்த முன்மொழிவு அதுதான்.
ஆனால், அதை எதிர்த்து யார்? நாடாளுமன்றத்திலேயே தீயிட்டுக் கொளுத்தியது யார்? இதே ரணில் தலைமையிலான எதிர்க்கட்சிதானே.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுப் பொதியைத் தீயிட்டுக் கருக்கினார்கள். வரலாற்றுத் துரோகம் அது. அதை வேறு எப்படிச் சொல்வது?
அது பற்றி நாடாளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்பியபோது, அதற்கு தான் காரணமல்ல, ஏன் அப்படி நடந்தது என்பதை மஹிந்தவிடம் கேட்டுப் பாருங்கள் என்றும், அப்போதிருந்த காவி நிறத்தாரின் அழுத்தம் என்றும் கதை விடுகிறார் ரணில். 
இவர்களாவது தீர்வு தருவதாவது? இப்படித்தான் ஆழ்மனம் சொல்கிறது.
என்றாலும், அரசாங்கத்தோடும் தமிழர் தரப்போடும் மட்டும் இந்தப் பிரச்சினையை சுருக்கப் போகிறார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது பற்றிப் பேசாமல் இருக்கவும் முடியவில்லை.
முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் பற்றி, மலையகத் தமிழரின் பிரச்சினைகள் பற்றி இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏனைய சிறு சமூகங்கள் பற்றிய குறைந்தபட்ச அக்கறையாவது இல்லையா?
வழக்கம் போல, முஸ்லிம் மற்றும் மலையக  அரசியல் கட்சிகள், தமக்கான தீர்வு குறித்து வாய் திறக்கவில்லை. ஜே.வி.பி.யும் இது தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாட்டில் இல்லை.


1985 திம்பு  பேச்சுவார்த்தை காலகட்ட அரசியல் சூழமைவு வேறு. 2002 சமாதான ஒப்பந்த கால அரசியல் சூழமைவு இன்னொன்று. ஒஸ்லோவை அனுசரணையாளராக அழைத்து வந்த நகர்வு அது. பூகோள அரசியலின் புதுப் பரிமாணம். அதன் அரசியல் பரிமாணம் முற்றிலும் வேறுபட்டது
2009 இனைத் தொடர்ந்து உருவான- போருக்குப் பிந்திய சூழலின் அரசியல் சமநிலை முற்றிலும் வேறுபட்டது. 
இப்போது சுதந்திர இலங்கையின் முக்கால் நூற்றாண்டு (75 ஆண்டு) என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதுவும் பொருளாதார ரீதியாக துவண்டு போய், அண்டை நாடுகளிடமும் உலக வல்லரசுகளிடமும் நட்பு நாடுகளிடமும் கேயேந்தும் கடைநிலையில் நிற்கிறோம்.
வரலாற்றின் பிரிசந்தியில்  எங்கே வந்து நிற்கிறோம் என்பது, நம் எல்லோருக்கும் நன்கு தெரியும்.
இந்த நிலையில் கூட, வரலாற்றிலிருந்து பாடம் படிக்க நாம் தயாரில்லை என்றால், யாரிடம் இதைச் சொல்லி அழுவது?
இலங்கையின் பன்மைத்துவக் கட்டமைப்பை- பல்லின, பல் பண்பாட்டுச் சூழமைவை – இனியும் கணக்கில் எடுக்கத் தயாரில்லை என்பதன் அர்த்தம் என்ன?
அரசாங்கம் மட்டுமல்ல, தமிழ் அரசியல் தரப்பு கூட இதை பிரக்ஞைபூர்வமாக உணரவில்லையா? 
ஒருதலைப்பட்சமான தீர்வுகள் வரலாற்றைப் பின்னோக்கியே நகர்த்தும். மேலோட்டமான பார்வையில், ஒரு பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டால், ஒன்பது பிரச்சினைகளுக்கான வாயிலை அது திறக்கும். கடைசியில் அப்பம் பங்கிட்ட குரங்கின் கதையில் போய் முடியும்.
பிரச்சினை வந்த பின் தலையில் கைவைப்பதை விட, வருமுன் காப்பதுதானே அரசியல் சாணக்கியம்?
2002 போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர், முஸ்லிம்கள் பேச்சுவார்த்தையில் தனித்தரப்பாகப் பங்கேற்க வேண்டும் என்ற வலுவான குரல் மேலெழுந்தது. 2003 இல் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இதை ஆதரித்து பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். அவர் முஸ்லிம்கள் தனித்தரப்பாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்கான 11 நியாயமான காரணங்களை முன்வைத்திருந்தார். “Muslims Should be Heard” என்றொரு சிறு நூலாக இதை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
அதேபோல அப்போது இருந்த முஸ்லிம் தகவல் நிலையம் (Muslim Information Centre) ஊடாக, நாங்கள் ஒரு நூலை வெளியிட்டோம். ‘Why Independent Muslim Participation at Sri Lanka Peace Negotiations?’ என்ற அந்நூலின் பதிப்பாசிரியராக நான் இருந்தேன். முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மேசையில் தனித்தரப்பாக முன்வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்கு கருத்தாதரவு நூல் (Advocacy tool) அது. பலரது முக்கியமான கட்டுரைகள் அதில் உள்ளடங்கியிருந்தன.
ஆனால், அப்போது பேச்சுவார்த்தை மேசையில், தனித்தரப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அரசாங்காமும் புலிகளும் அப்போது அதனை ஏற்றுக் கொள்ளகவில்லை. அரச தரப்பின் பங்காளிகளாக வாருங்கள் என்றே சொல்லப்பட்டது. பின்னர் வரலாறு எகெல்லாமோ நகர்ந்து விட்டது.
அதே பழைய வரலாற்றுத் தவறைத்தான் மீண்டும் மீண்டும் இழைக்கப் போகிறோமா? இலங்கையர்களாக நம் பதில்தான் என்ன?
முஸ்லிம் மக்களதும் மலையகத் தமிழரினதும் ஏனைய சிறு சமூகங்களினதும் பிரச்சினைகளை யார் பேசுவது? அதற்கான வரலாற்றுத் தேவையை மறுப்பது ஏன்? கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றால், அதே கசப்பான வரலாறுதான் மீண்டு கொண்டிருக்கும்.
ரணில் ஆண்டால் என்ன, மஹிந்த ஆண்டால் என்ன, சஜித் வந்தால்தான் என்ன-இலங்கைக்கு கிட்டிய எதிர்காலத்தில் விடிவு இல்லை என்ற செய்தியையே இது அழுத்தாமாகச் சொல்கிறது.
கணியன் பூங்குன்றன் சொல்லியிருப்பது போல, “தீதும் நன்றும் பிறர் தர வாரா.”   சிராஜ் மஷ்ஹூர்01.12.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்