
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்6கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். 224 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 9115 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.27 ஆகும்.
என்றாலும் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.
சொந்த மைதானத்தில் இந்தியா கோப்பையை வெல்லும்போது அணியில் இல்லாதது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னுடைய மிகப்பெரிய சோகமான தருணம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம் பெறவில்லை. எங்களுடைய சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரில் இடம் பிடிக்காதது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம். மேலும், என்னுடைய சொந்த மைதானமான வான்கடேயில் இறுதி போட்டி நடைபெற்றது.
உலக கோப்பை தொடருக்கு முன் நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால்தால் அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை’’ என்றார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் ஐந்து சதங்களுடன் 648 ரன்கள் குவித்தார். சராசரி 81 ஆகும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மோசமாக விளையாடியதன் காரணமாக இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.