இதனை விட நாட்டுக்குச் செய்ய வேண்டிய உதவி வேறு ஒன்றும் இல்லை! இலங்கை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள்

தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள் தங்களை சுயதனிமைப் படுத்தலில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், இதனை விட நாட்டுக்கு செய்ய வேண்டிய பெரிய உதவி வேறொன்றும் இல்லை என, ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் வைத்தியர் சீதா அரபேபொல தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொது மக்களை விழிப்பாக இருக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 2258 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் வெளிநாட்டிலிருந்து வந்த 1500 – 2000 அளவிலானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் வைத்தியர் சீதா அரபேபொல ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில்,

குறித்த நபர்கள் சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை விட நாட்டுக்கு செய்ய வேண்டிய பெரிய உதவி வேறொன்றும் இல்லை. நாட்டு மக்களின் நன்மை குறித்தும் சிந்தித்து உரிய முறையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் 16 வரை விரிவுபடுத்துவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு உணவு, வைபை வசதி, தொலைக்காட்சி, ஆடை கழுவும் இயந்திரம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரவமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படாதவர்களை கண்டுபிடிக்க பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முகநூலில் நாம்