இங்கிலாந்தை வெற்றிகொண்டது இந்திய அணி

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6 விக்கெட் குவியலுடனான அதிசிறந்த பந்துவீச்சப் பெறுதியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்து இந்தியாவின் வெற்றியை இலவாக்கினார்.

இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் 2017இல் நடைபெற்ற போட்டியிலேயே இதற்கு முன்னர்  27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியை பும்ரா கொண்டிருந்தார்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இங்கிலாந்தை 110 ஓட்டங்கள்  என்ற  குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழக்கச் செய்த இந்தியா, அவ்வணிக்கு எதிராக முதல் தடவையாக 10 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஜய்பூரில் 2006இல் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து பெற்ற 125 ஓட்டங்களே இந்தியாவுக்கு எதிராக இதற்கு முன்னர் அவ்வணி பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை 25.2 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 – 0 என்ற ஆட்டக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 58 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஷிக்கர் தவான் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இதில் 4 பவுண்டறிகள் அடங்கின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து எதிரணியின் வேகப்பந்துவிச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு சிரான இடைவெளயில் விக்கெட்களை இழந்தது. 8ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த இங்கிலாந்து, ஒருவாறு 100 ஓட்டங்களைக் கடந்தது.

அணித் தலைவர் ஜொஸ் பட்லர் (30), டேவிட் வில்லி (21), 10ஆம் இலக்க வீரர் ப்றைடன் கார்ஸ் (15), மொயீன் அலி (14) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். டெவிட் வில்லி, ப்றைடன் கார்ஸ் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 35 ஓட்டங்களே இங்கிலாந்து இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

ஜேசன் ரோய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய நான்கு பிரதான துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தது இங்கிலாந்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது, இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7.2 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். மொஹமத் ஷமி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்