
இலங்கையில் தீவிரமடைந்து செல்லும் அமைதியின்மையை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
எனினும் இலங்கைக்கான கிரிக்கெட் விஜயம் அடுத்த மாதம் திட்டமிட்டவாறு அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களில் முன்னொருபோதும் இல்லாதவாறு இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்ததால் ஒரு மாதத்துக்கு மேலாக நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை திங்கட்கிழமை இராஜினாமா செய்தார்.
அவர் இராஜினாமா செய்வதற்கு முன்னர் காலிமுகத் திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் மூவகை கிரிக்கெட் தொடரகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
ஆனால், நாட்டில் அமைதி நிலைநாட்டப்படாத பட்சத்தில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா தனது அணிகளை இங்கு அனுப்பும் என எதிர்பார்க்க முடியாது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.