ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஆஸ்லே பார்டி, கெனின் அரைஇறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்லே பார்டி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கெனின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மெல்போர்ன்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)-ஏழாவது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

இதில் ஆஸ்லே பார்டி 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 14-வது வரிசையில் உள்ள சோபியா கெனின் (அமெரிக்கா) – ஜாபெர் (துனிசியா) மோதினார்கள். இதில் கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்லேபார்டி- கெனின் மோதுகிறார்கள்.

உலகின் 2-வது நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), அதிக கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதும் கால் இறுதி ஆட்டங்கள் பிற்பகலில் நடக்கிறது.

3-வது வரிசையில் உள்ள பெடரர் அமெரிக்க வீரர் சான்ட் கிரனையும், நடப்பு சாம்பியனான ஜோகோவிச் கனடாவை சேர்ந்த ரோனிக்கையும் கால் இறுதியில் சந்திக்கிறார்கள்.

முகநூலில் நாம்