ஆஸ்திரேலியா காட்டுத்தீ: கருகிய இடங்களில் துளிர்விடும் செடிகள்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ அந்நாட்டின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்திருக்கிறது.

50 கோடிக்கும் மேற்பட்ட விலங்குகள், எண்ணிக்கையில் அடங்கா அளவிலான மரங்கள் என பல உயிரினங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பற்றி எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீக்கு இரையாகி உள்ளன

6.3 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் தீயால் கருகியிருக்கிறது. ஒரு ஹெக்டேர் என்பது ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவை போன்றது.

ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் சிறு உயிர்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அவற்றை முரே லோவி என்ற உள்ளூர் புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸில் குல்நுரா என்ற பகுதியில் தீயால் பாதிக்கப்பட்ட அவரது வீடு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்க சென்ற அவர், அந்த இடத்தில் முளைக்கத் தொடங்கிய பச்சைப் புற்களை படம் பிடித்துள்ளார்.

ரோஸ் நிறத்திலான இலைகளும் கருகிய மரக்கிளைகளில் இருந்து துளிர் விடுவதை அவர் பார்த்திருக்கிறார்.

பெரும் பேரழிவு என்று வர்ணிக்கப்பட்ட இந்த காட்டுத்தீ அணைந்த ஒரு சில நாட்களிலேயே இவ்வாறு உயிர்களை அந்த இடத்தில் மீண்டும் பார்ப்பது நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறுகிறார்.

தீயில் பாதிக்கப்பட்ட இடங்களில் இவ்வளவு விரைவாக புற்கள் முளைப்பது சாத்தியமா?

ஆம். செடி கொடிகள் எல்லாம் பல கோடி ஆண்டுகளாக காட்டுத்தீயால் பாதிக்கப்படுவது அடிக்கடி நிகழும் ஒன்றுதான். இதில் எரிந்த பிறகு மீண்டும் முளைப்பதற்கான திறனை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்கிறார் தீ சூழலியல் நிபுணர் கிம்பர்ளே சிம்ப்ஸன்.

இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.

ஒன்று. மீண்டும் முளைப்பது. யூகலிப்டஸ் போன்ற பெரும்பாலான ஆஸ்திரேலிய மர வகைகளில் அதன் மரப்பட்டைகளின் கீழ் மொட்டு போன்ற ஒன்று இருக்கும். இவை தடிமனான மரப்பட்டையின் ஆழத்தில் இருக்கும். அதிகப்படியான சூடு படும்போது மரப்பட்டை அந்த மொட்டுகளை காக்கும். அதே போல புற்கள் மற்றும் புதர்களையும் அந்த இடத்தில் இருக்கும் மண் காக்கும். அதனால் இவை மீண்டும் விரைவாக முளைக்கும்.

மற்றொன்று வெப்ப எதிர்ப்பு விதைகள் மூலம் மீண்டும் உடனடியாக செடி கொடிகள் வளரும் வாய்ப்பு இருக்கிறது.

ஆஸ்திரேலியா முழுக்க இவ்வாறு நடப்பது சாத்தியமா?

கருகிய ஒரு செடி மீண்டும் துளிர் விடுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். சில செடி வகைகள் உடனடியாக மீண்டும் வளரும் திறனை பெற்றிருக்கும். மற்றவை வளர நீண்ட காலம் ஆகலாம்.

ஆனால் தற்போது ஏற்பட்ட இந்த மோசமான காட்டுத்தீ நிகழ்வு, சில செடி வகைகள் பிழைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் சிம்ப்ஸன்.

ஆஸ்திரேலியாவின் வரண்ட வானிலையோடு, வெப்ப நிலையும் அதிகரிப்பதால், அதிக செடிகள் இறந்துபோகலாம் என்று அவர் கூறுகிறார்.

சில செடிகள், மீண்டும் வளர்வதற்கான திறனை மொத்தமாக இழக்கலாம என்றும் அவர் கவலை தெரிவிக்கிறார்.

முக்கியமாக ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளில் இந்த தீ எற்படுத்தியுள்ள விளைவுகள் மோசமானவை. மழைக்காடுகளில் காட்டுத்தீ நிகழ்வு என்பது அடிக்கடி நிகழாது. மேலும் அங்குள்ள செடி மற்றும் மரம் வகைகள் மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய குறைவான திறனையே கொண்டுள்ளன.முகநூலில் நாம்