
தற்போது நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனை அனைவரும் அறிவோம். அதனால் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய தேவைகளும் உள்ளது. அதற்காக ஆலய வழிபாடுகளை தடுக்கவோ அவற்றை நிறுத்தவோ முடியாது.
இது பற்றி சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ. ஜெ.மயூரக்குருக்கள் இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தபோது,
ஆலயங்கள் ஆகம வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அவை காலகாலமாக அவ்வாறே நடந்தும் வருகின்றது.
நித்திய பூஜைகள், நைமித்திய பூஜைகள் என்பன தவறாது நடைபெற வேண்டுமென ஆகமங்கள் கூறுகின்றன.
இதற்கு முன்னரும் கொலறா, மலேரியா போன்ற கொடிய நோய்கள் எம்மை தாக்கிய போதும் இவ்வாலய வழிபாடுகளில் எந்த மாற்றங்களும் வரவில்லை.
ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பலர் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறி வருகின்றனர்.
அவ்வாறு ஒன்று கூடுவதனால் மக்களிற்கு நோய்த்தாக்கம் ஏற்படவாய்புள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆனால் அதற்கான பாதுகாப்பினைத் தேடவேண்டியவர்கள் நாங்களே.
அதனை விடுத்து ஆலய கிரியை முறைகளில் அவற்றை தடுக்கவோ அல்லது செய்யாது இடைநிறுத்தவோ முடியாது. அவை நியமத்தின் படி நடந்தே ஆக வேண்டும்.
ஆக மொத்தத்தில் நேரகாலங்களை குறுகிய உள்ளடங்கலுடன் ஆலய விழாக்கள் இடம்பெற வேண்டும். காலகாலமாக செய்துவந்தவை செய்யப்பட வேண்டும். ஆகமங்களையோ ஆகம விதிகளையோ சட்டங்கள் மாற்ற முடியாது.
அனேக ஆலயங்களில் எதிர்வரும் 28ம் திகதி முதல் விழாக்கள் ஆரம்பிக்கின்றன. அவை நடைபெறும். எனவே ஆலயம் சார்ந்தோரும் ஏனைவர்களும் அவற்றை அமைதி முறையில் செய்வதே உசிதமாகும்.
மகோற்சவ ஆலயங்கள் மகோற்சவம் செய்யாது விடுதல் எப்போது எனின் பாலஸ்தாப காலத்தில் மற்றும் அனர்த்தங்கள் வந்து ஊரோடு அனைவரும் வெளியேறும் காலங்களில் மாத்திரமே.
ஏனைய காலங்களில் அதற்கான பிராயச்சித்தங்கள் செய்யப்பட்டு அவ்விழாக்கள் தொடரும். ஆகவே பெரும் எடுப்பிலே அல்லாமல் அமைதியான முறையில் மகோற்சவங்களை செய்யுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.