ஆப்கான்- தலிபான் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் கட்டார் தலைநகர் டோஹாவில் ஆரம்பமாகியுள்ளன.

இன்று (சனிக்கிழமை) டோஹாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், முக்கிய பேச்சாளர்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபையின் தலைவர் அப்துல்லா அப்துல்லா, தலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பரதர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இரு தரப்பினரும் முதல் முறையாக நேருக்கு நேர் அமரும் பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை தொடங்கும்.
தனது பங்கிற்கு, அப்துல்லா ஒரு கண்ணியமான மற்றும் நீடித்த அமைதியைத் தேடுவது பற்றி உரையாற்றினார்.

இதன்போது, ‘நாங்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து, அமைதிக்காக நேர்மையாக உழைத்தால், நாட்டில் தற்போது நடந்து வரும் துயரங்கள் முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன்’ என கூறினார். மேலும், ‘மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், தலிபான் துணைத் தலைவர் பரதர், ஒரு இஸ்லாமிய முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற தனது குழுவின் கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்.

‘ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திரமான, வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதற்கு ஒரு வகையான இஸ்லாமிய அமைப்பு இருக்க வேண்டும், அங்கு அதன் குடிமக்கள் அனைவரும் தங்களை பிரதிபலிப்பதைப் பார்க்கிறார்கள்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்