ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் – போலீஸ் மோதலில் 7 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.


இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. 

அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் எனவும் தலிபான்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில், அந்நாட்டின் குண்டூஸ் மாகாணம் மஹ்மோர்யட்-இ-டுவாம் என்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். தலிபான்களின் தாக்குதலுக்கு போலீசாரும் தக்க பதிலடி கொடுத்தனர்.


இரு தரப்பினருக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த மோதலில் 2 போலீசார், 5 தலிபான்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், போலீசார் மற்றும் தலிபான்கள் தரப்பில் தலா 2 பேர் காயமடைந்துள்ளனர். 

முகநூலில் நாம்