ஆப்கானிஸ்தானில் 1500 தலிபான்கள் விடுதலை- அதிபர் அஷ்ரப்கானி உத்தரவு

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் செயல்படும் அரசு படைகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசும், தலிபான் பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நிலையான அமைதி ஏற்படுத்த அதிபர் அஷ்ரப்கானி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் 2-வது முறையாக அதிபர் பொறுப்பேற்ற அவர் 2 பக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் நாட்டில் அமைதி ஏற்படுத்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 1500 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்படை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளிப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்னும் 4 நாட்களில், தொடங்குகிறது. தினமும் 100 தலிபான் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். இதன்மூலம் 15 நாட்களில் 1500 பேர் விடுதலையாவார்கள்.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அமைதி திரும்பும் பட்சத்தில் ஒவ்வொரு 2 வாரத்திலும் 500 பேர் வீதம் விடுவிக்கப்பட உள்ளனர். அதன்மூலம் 5 ஆயிரம் தலிபான்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்