ஆபாச பட நடிகை பணம் வழங்கியது தொடர்பான வழக்கில் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படலாம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்தார். ஆனால், இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பணம், பிரசார நிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் தான் வருகிற 21 ஆம் திகதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி, தனது ட்ருத் சமூக வலைதளத்தில் கூறும்போது, “முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வருகிற 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.

கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் இன்று கைது செய்யப்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்