ஆதரவளித்தால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கான உத்தரவாதத்தை கோருங்கள் – சமத்துவக் கட்சி கோரிக்கை

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த்தரப்புக்கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும். போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள்,பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான உத்தரவாதத்தை கோர வேண்டும். என சமத்துவக்
கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்ப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவதாது

நாட்டின் அரசியல் பொருளாதார நிலவரம் மிக மோசமான அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகி, மக்களுடைய நாளாந்த வாழ்க்கையே பெரும் சவாலாகியிருக்கிறது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு எதிர்காலம் எப்படி அமையும் என்ற கேள்வி  எழுந்துள்ளது. இதற்கு எவரிடத்திலும் பதிலைக்
காணமுடியவில்லை. இதனால் மக்கள் போராட்டம் வலுப்பெற்று நிலையான அரசியல், பொருளாதார மாற்றத்தைக் கோரிநிற்கிறது.

 இந்த நிலையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தென்னிலங்கை அரசியற் கட்சிகள் உட்பட தமிழ், முஸ்லிம்,  மலையகக் கட்சிகள் அனைத்தும் அரசியற் குழப்பத்திலும் வழமையான சூதாட்டத்திலுமே ஈடுபடுகின்றன. இது
நாட்டில் மேலும் ல பல நெருக்கடிகளை உருவாக்கி, மக்களுக்கு எதிரான போக்கையே வளர்ப்பதாக அமைகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் நாடகங்களையும் கட்சி லாபங்களையும் கைவிட்டு, மக்களுக்கான அரசியல் நடவடிக்கைகளில் அனைத்துத்
தரப்பினரும் பொறுப்பாகச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையென்றால் தொடர்ச்சியாக நடந்து வரும் பொறுப்பற்ற அரசியல் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் போராடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும்.

இதேவேளை இந்த அரசியற் சூழலில் நடைபெறவுள்ள இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த்தரப்புக் கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும். போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள், பிரச்சினைகளுக்கான தீர்வை
முன்வைக்கும் வகையிலான அழுத்தத்தை அவை கோர வேண்டும். எவருக்காவது ஆதரவை வழங்குவதாக இருந்தால் அவை இதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ள
வேண்டும்.

வரலாற்றுச் சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் இழந்து வரும் நிலை மேலும் தொடரக்கூடாது. தமிழ் மக்கள் எப்போதும் தேசிய நெருக்கடி, இன நெருக்கடி என இரட்டை நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்பதை உணர்ந்து அனைத்துத்
தரப்பும் செயற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இந்தச்சந்தர்ப்பத்தில் மக்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் இதற்கான அழுத்தத்தை இந்தக் கட்சிகளுக்கு அளிப்பது அவசியமாகும்  என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்