ஆசிரியர் விடுமுறை தொடர்பாக அவசரக் கடிதம்

ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி, அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா பெக்ஸ் மூலம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆசிரியர் தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் மாணவர் கல்வி நலனுக்குப் பாதிப்பில்லாத வகையில் தங்களால் முன்னெடுக்கப்படும் விடயங்களை நாம் பாராட்டுகின்றோம். 

எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில் கல்வியமைச்சு விடுத்துள்ள பொதுவான அறிவுறுத்தல்களுக்கமைய, பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்லல் தொடர்பில் தங்களால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சில அதிபர்கள் செயல்படுகின்ற விதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ள போதிலும், பல அதிபர்கள் ஆசிரியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாகத் தான்தோன்றித் தனமாகச் செயற்படுகின்றனர்.

இதற்கு வலயக் கல்விப்பணிமனை உயர் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதாக அறியமுடிகிறது. எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தொடர்பில் அதிபர்களுக்கான தெளிவில்லாமையும் இவ்வாறான முறைகேடுகள் நடைபறுவதற்கான காரணமாகும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

எரிபொருள் பிரச்சினையால் முழுநாடும் முடங்கிப் போயுள்ள நிலையில் தூர இடங்களுக்குச் செல்கின்ற ஆசிரியர்களை பாடசாலைக்கு எவ்வாறாயினும் வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது, வராவிட்டால் சொந்த விடுமுறையாகக் கருதுவதாகப் பயமுறுத்துவது, கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாட்டை முன்வைத்து ஆசிரியர்களின் விடுமுறையினைக் கணக்கெடுப்பது உள்ளிட்ட அராஜகங்கள் அதிபர்களால் அரங்கேறி வருகின்றன.

இது பற்றி சில ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிய போது மாகாணப் பணிப்பாளர் இது தொடர்பில் முறையான அறிவிப்பினை விடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு கைவிரல் அடையாள இயந்திரத்தை இடைநிறுத்துவதோடு, இக்காலப்பகுதிக்கான ஆசிரியர் விடுமுறை தொடர்பான கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய எமது மாகாணத்திற்குப் பொருத்தமான சுற்றுநிரூபமொன்றை அவசரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்