ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை வெல்லப்போவது யார் ; சுப்பர் – 4 சுற்று வாய்ப்பு யாருக்கு?

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான இலங்கை, அப் போட்டியில் நிலைத்திருக்குமா அல்லது வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் பங்களாதேஷுடனான பி குழு போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (01) வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

இரண்டு அணிகளினதும் சுப்பர் 4 சுற்று வாய்ப்பு நூலிழையில் தொங்கிக்கொண்டிருப்பதால் இந்தப் போட்டி அவ்வணிகளுக்கு ஒரு நொக் அவுட் போட்டியாக அமையவுள்ளது.

மேலும் இந்த இரண்டு அணிகளையும் வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் 4 சுற்றுக்கு முதலாவது அணியாக ஆப்கானிஸ்தான் (பி 2) தகுதிபெற்றிருந்தது. இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் பி 1 அணியாக சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

ஆப்கானிஸ்தானிடம் இலங்கை அடைந்த தோல்வியையும் பங்களாதேஷ் அடைந்த தோல்வியையும் ஒப்பிடுகையில் இலங்கையின் ஆற்றல்கள் மிகவும் பின்னிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் விளையாடப்பட்ட 12 போட்டிகளில் 8 – 4 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

அதேவேளை, இலங்கை கடைசியாக விளையாடிய 14 இருபது 20 போட்டிகளில் 10இல் தோல்வி அடைந்துள்ளதுடன் பங்களாதேஷ் 16 போட்டிகளில் 14இல் தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளில் யார் பலசாலி, யார் பலவீனர் என்று கூறமுடியாது.

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஷார்ஜாவில் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் சந்தித்துக்கொண்ட போது சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ ஆகியோரின் அரை சதங்களின் உதவியுடன் 5 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இந்த இரண்டு அணிகளும் கொழும்பில் 2018இல் நடைபெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கெட் (இ20) போட்டியில் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பங்களாதேஷ் வெற்றி பெற்றிருந்தது.

முதலாவது போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ், இரண்டாவது போட்டியின்போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு மத்தியில் ஒரு பந்து மீதமிருக்க 2 விககெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க ஆகிய மூவரே சமகால இருபது 20 இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர்.

மறுபுறத்தில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணியில் இடம்பெற்ற ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, முஷ்பிக்குர் ரஹிம், மெஹெதி ஹசன் மிராஸ், முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம்பெறுகின்றனர்.

அந்தப் போட்டியில் பங்களாதேஷ் விரர்கள் குறிப்பாக நஸ்முல் இஸ்லாம் பாம்பு நடனம் ஆடுவதன் மூலம் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. அதனால் சிறிது நேரம் போட்டி தடைப்பட்டிருந்தது. இறுதியில் பங்களாதேஷ் வெற்றிபெற்ற பின்னர் அவ்வணியின் தங்குமறையில் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் பின்னர் நிலைமை சுமுகத்திற்கு திரும்பியது.

இப்போது, பங்களாதேஷ் அணியில் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருவர் (முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷக்கிப் அல் ஹசன்) மாத்திரம் இருப்பதாகவும் வேறு எவரும் சிறந்த பந்தவீச்சாளர்கள் அல்லவெனவும் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானைவிட பங்களாதேஷ் பலம் குன்றிய அணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அனுமானிப்பதை விடுத்து ஆடுகளத்தில் சாதிப்பதே முக்கியம் என பங்களாதேஷ் வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் பதிலடி கொடுத்திருந்தார்.

இந் நிலையில் வரவேற்பு நாடு என்ற வகையிலும் முன்னாள் சம்பியன் என்ற வகையிலும் பங்களாதேஷைவிட இலங்கை பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் இப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைவதாக இருந்தால் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, சகலதுறைகளிலும் – துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு – அதீத திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு வெற்றியை மாத்திரம் குறியாகக் கொண்டு இலங்கை விளையாட வேண்டும். அந்தப் போட்டியில் விளையாடிய அதே விரர்கள் இலங்கை அணியில் இன்றும் இடம்பெறுவார்கள் என கருதப்படுகிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட நேர்ந்தால் இலங்கையின் ஆரம்ப வீரர்கள் ஓரிரு ஓவர்களை நிதானத்துடன் எதிர்கொண்டு பின்னர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி கணிசமான ஓட்டங்களைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் துடுப்பாட்ட வீரர்கள் நுட்பத்திறனுடன் தங்களது அடிகளைத் தெரிவு செய்யவேண்டும். அதனையும் விட விக்கெட்களுக்கு இடையில் ஓடுவதிலும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

பங்களாதேஷ் அணியும் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கும் என நம்பப்படுகிறது.

இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கதாக அமையும் இந்தப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்