
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 21 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாத்தில் 19 வயதுக்குட்ட உலகக் கிண்ண அணித் தலைவர் துனித் வெல்லாலகே அறிமுக வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் ப்ரமோத் மதுஷானும் புதுமுக வீரராக குழாத்தில் இடம்பெறுகிறார். தென் ஆபிரிக்காவில் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகல துறைகளிலும் துனித் வெல்லாலகே பிரகாசித்திருந்தார். இலங்கை சார்பாக வெல்லாலகே அதிக ஓட்டங்களை (264) பெற்றதுடன், அதிக விக்கெட்களையும் (17) கைப்பற்றியிருந்தார். அத்துடன் முழு சுற்றுப் போட்டியிலும் வெல்லாலகேதான் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் ஆவார். இந்த ஆற்றல்களின் அடிப்படையில் அவர் ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, பானுக்க ராஜபக்ச, நிரோஷன் திக்வெல்ல, வனிந்து ஹசரங்க, லஹிரு மதுஷன்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் குழாத்தில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளனர். குழாத்தில் தொடர்ந்து இடம்பெறும் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோருடன் தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் வருட முற்பகுதியில் முழங்கால் உபாதைக்குள்ளான அவிஷ்க பெர்னாண்டோ பூரண குணமடையாததால் அவருக்கு தொடர்ந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை குழாம் தசுன் ஷானக்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித்து அசலன்க, தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ச, நிரோஷன் திக்வெல்ல, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, நுவன் துஷார, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன் ஜயவிக்ரம, ஜெவ்றி வெண்டர்சே, லஹிரு மதுஷன்க, துனித் வெல்லாலகே, ப்ரமோத் மதுஷான் .