அவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

அவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் நாளாந்தம் 3.5 மில்லியன் லீற்றர் பால் தேவைப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியுள்ளார்.

பால்மா இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும், அதற்காக பாரியளவில் நிதி செலவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியுள்ளார்.

இதனூடாக நாளாந்த பால் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணத்தால் அவுஸ்திரேலியாவில் இருந்து, 2500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இதற்கு முன்னர் பல தடவைகளில் அவுஸ்திரேலியாவில் இருந்து கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

எனினும், அவற்றினால் எவ்வித பலன்களும் கிடைக்காமை தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இருந்து மாத்திரம் கறவைப் பசுக்கள் ஏன் இறக்குமதி செய்யப்படுகிறது என கணக்காய்வாளர் நாயகமும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விடயத்தில் மோசடி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டமையால், அது தொடர்பில் கணக்காய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அவுஸ்திரேலியாவில் இருந்து கறவைப் பசுக்ளை இறக்குமதி செய்தமையால் உள்ளூர் பசுக்களும் நோய்வாய்ப்பட்டிருந்தன.

அது மாத்திரமின்றி இறக்குமதி செய்யப்பட கறவைப் பசுக்களும் நோய்வாய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

இதேநேரம், 2 வருடங்களுக்கு வரிப்பணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கும் மத்தியதர வகுப்பினருக்கு வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அந்நிய செலாவணி தொடர்பான நெருக்கடி காரணமாக, நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கான வர்த்தமானிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்