அவர் ஆடினால் டி.வி.யை விட்டு விலக மாட்டேன் – பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழாரம்

இந்திய வீரர் ஒருவர் ஆடும் போது டி.வி.யை விட்டு விலகி செல்ல மாட்டேன் எனவும் அவரது ஆட்ட ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீர ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் ஜாகீர் அப்பாஸ். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் ‘ஆசியாவின் பிராட்மேன்’ என்று அழைக்கப்பட்டவர்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித்சர்மாவின் ஆட்டத்தை ஜாகீர் அப்பாஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். ஆனால் ரோகித்சர்மாவின் ஆட்ட ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அவர் ஆடும் விதம் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியானது. அவர் ஷாட்டை உருவாக்கும் விதம் ஒரு கலையாகும். கோலியிடம் இல்லாத ஒன்று அவரிடம் இருக்கிறது.

ரோகித்சர்மா ஆடும் போது நான் டி.வி.பார்ப்பதை விட்டு விலகி செல்ல மாட்டேன். அவர் அடிக்கும் ஷாட்டுகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோரது பேட்டிங்கை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர்களுக்கு அதிக அளவில் பணம் கிடைக்கிறது. ஆனால் சரியான முறையில் கடுமையாக பணியாற்றுகிறார்கள். இதே போல உள்நாட்டு போட்டி அமைப்பிலும் மாற்றம் செய்யவில்லை. இது சிறந்ததாக இருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்போதுமே புகழ் பெற்றது. இதனால் தான் சிறந்த வீரர்கள் எப்போதுமே உருவாகி வருகிறார்கள். மேலும் அரசியல் மற்றும் பொறாமையில் இருந்து கிரிக்கெட் அமைப்பு விலகி இருக்கிறது.

அபாரமாக விளையாடக்கூடிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டால் அவர்களது இடத்தை நிரப்புவதில் இந்தியாவில் சிக்கல் இல்லை. ஏனென்றால் சிறந்த வீர்கள் உருவாகுவதில் இடைவெளி எதுவும் இல்லாமல் நிரப்பப்படுகிறது.

கவாஸ்கருக்கு பிறகு தெண்டுல்கர் வந்தார். அவருக்கு பிறகு தற்போது விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.

இவ்வாறு ஜாகீர்அப்பாஸ் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்