
‘யானை’ படத்தின் வசூல் வெற்றியை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சினம்’ திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சினம்’. இதில் அருண் விஜய் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பலாக் லால்வாணி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மறைந்த நடிகர் ஆர்.என். ஆர் மனோகர், காளி வெங்கட், கே. எஸ். ஜி. வெங்கடேஷ், ‘மறுமலர்ச்சி’ பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷபீர் இசையமைத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மூவி சிலைட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் மூத்த நடிகர் ஆர். விஜயகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். செப்டம்பர் 16ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சினம் படத்தின் கதையை காவல்துறையில் பணியாற்றிய காவலர் ஒருவர் எழுதியிருக்கிறார். இந்தக் கதையை அருண் விஜய் மற்றும் அவரது தந்தை விஜயகுமாரிடம் விவரித்தபோது, அவர்களே தயாரிக்க ஒப்புக்கொண்டனர். இது இந்த படத்திற்கு உத்வேகம் அளித்தது. கொரோனா தொற்று காலகட்டத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து நடத்தினோம். டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், தயாரிப்பாளரும், நடிகருமான விஜயகுமார், ‘இந்த சினம் படமாளிகையில் தான் வெளியாக வேண்டும்.
படமாளிகைக்கு வருகை தரும் ரசிகர்களுக்கானது’ என்றார். அதன் காரணமாக காத்திருந்து தற்போது பட மாளிகையில் ‘சினம்’ வெளியாகிறது. கோபம் வேறு. சினம் வேறு. சினம் ஒருவருக்கு வருகிறது என்றால், அதன் பின்னணியில் தர்மத்திற்குரிய வலுவான காரணம் இருக்கும். அதனால் இந்த ‘சினம்’ ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்” என்றார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடி நடிகர் அருண் விஜய் பாடகராகவும் பங்களிப்பு வழங்கி இருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் றாப் பாணியில் அமைந்த அந்த பாடலை பாடி, பார்வையாளர்களின் கரவொலியைப் பெற்றார்.
‘யானை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சினம்’ படம் வெளியாகிறது. கொமர்ஷல் அம்சங்கள் நிறைந்திருப்பதால் இந்த திரைப்படத்தை திரையுலக வணிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.