
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து
வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை
ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல்
இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார
சுபீட்சத்தை அடைந்த நாடொன்றை உருவாக்கும் நோக்குடன் 75 வருடங்களுக்கு
முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க ஏற்படுத்திய இலங்கை எனும் தனித்துவத்தை
நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை
குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்த
ஜனாதிபதி, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித்
தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக்
கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள்
துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும்
தெரிவித்தார்.