
அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால்
உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை
திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும்
மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச்
சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது
நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம்
வகிப்பதுடன், குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்ற
கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்ற அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள
எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும்
நிர்வாக அதிகாரங்களுக்கு ஊடாகவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட
அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம்
என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர்
உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை
அமுல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்றவற்றை ஆராய்ந்து, அவை 13 ஆவது
திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை
மேற்கொள்ளுதல் இரண்டாவது கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.