அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ஜனாதிபதியுடன் பொருளாதார மறுசீரமைப்புத்திட்டங்கள் குறித்துப் பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க
திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட்
கப்ரொத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
மற்றும் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து நாட்டின்
பொருளாதார மீட்சி மற்றும் அதற்கு அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை
நாட்டை வந்தடைந்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான
பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத், அரசாங்கத்தின்
உயர்மட்டப்பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
பொருளாதாரத்துறைசார் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும்
சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

அந்தவகையில் நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை
சந்தித்த ரொபேர்ட் கப்ரொத், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை
எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத்
திட்டமிட்டிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு
விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்